கர்நாடக அமைச்சர் ராமுலுவின் மகள் திருமணம் பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் நேற்று ஆடம்பரமாக நடந்தது.9 நாட்கள் திருமண கொண்டாட்டத்திற்காக ரூ.500 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சரும் பெல்லாரி ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பருமான ராமுலுவின் மகள் ரஷ்மிகாவுக்கும், பெல்லாரி சுரங்க அதிபர் ரவிகுமாரின் மகன் லலித் சஞ்சீவ் ரெட்டிக்கும் கடந்த சில மாதங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 26-ம் தேதி பெல்லாரியில் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கின. கடந்த 9 நாட்களாக தினமும் காலையும் மாலையும், சங்கீத கச்சேரி, பல்வகை நடனம் உட்பட விதவிதமான கொண்டாட்டங்கள் அரங்கேறின.
முகூர்த்த நாளான நேற்று, பெங்களூரு அரண்மனை மற்றும்அதனை சுற்றியுள்ள மைதானத்தில் பாகுபலி திரைப்படம் போன்றசினிமா செட் அமைக்கப்பட்டிருந்தது.
பல வகையான விருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இசைக் கச்சேரியுடன் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்புதொடங்கியது. கர்நாடக முதல்வர்எடியூரப்பா, அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, அசோகா, சுரேஷ்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
திருமணத்தின் இறுதி நாளானநேற்று காலையில் 30 பூஜாரிகள்மந்திரங்கள் முழங்க, ரஷ்மிகாவுக்கும், லலித் சஞ்சீவ் ரெட்டிக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் கன்னட நடிகர்கள் சுதீப், புனித் ராஜ்குமார் யஷ் உள்ளிட்டோரும் முக்கிய அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
அதே போல, பெல்லாரி, கதக், பீஜாப்பூர், குல்பர்கா ஆகிய மாவட்டங்களில் இருந்து ராமுலுவின் ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் பெங்களூருவில் குவிந்தனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் அரண்மனை மைதானமும், சுற்றியுள்ள பகுதிகளும் போக்குவரத்து நெரிசலால் திணறியது. வட இந்திய, தென்னிந்திய,வட கர்நாடகா,சீனா, ஐரோப்பா உள்ளிட்ட வட்டார முறையில் செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட வகையான உணவுகள் விருந்தினருக்கு பரிமாறப்பட்டன.
விஐபி பிரிவில் எதிர்ப்பார்த்ததை விட அதிக கூட்டம் வந்ததால் உணவு தீர்ந்து போனது. திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் இனிப்புகளும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.
மிகவும் பிரம்மாண்டமாக 9நாட்கள் நடந்த இந்த திருமணத்திற்காக ரூ. 500 கோடி செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே அரண்மனை மைதானத்தில் 2016-ல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது ஜனார்த்தன ரெட்டியின் மகளுக்கு ரூ. 650 கோடி செலவில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.