இந்தியா

கரோனா அச்சம்; வெளிநாட்டுக் கப்பல் பயணிகள் இந்தியத் துறைமுகங்களில் இறங்க அனுமதி மறுப்பு 

பிடிஐ

சீனாவில் இருந்து கப்பல்களில் பயணம் செய்த அல்லது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் வழியாகப் பயணம் மேற்கொண்டிருந்த பயணிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் 16,076 பேர் இந்தியத் துறைமுகங்களில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு (கோவிட் -19) அந்த நாட்டில் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் தீண்தயாள் (முந்தைய காண்ட்லா), மும்பை, ஜே.என்.பி.டி, மர்முகாவ், புதிய மங்களூர், கொச்சின், சென்னை, காமராஜர் (முந்தைய எண்ணூர்), வி.ஓ.சிதம்பரனார், விசாகப்பட்டினம், பாரதீப், கொல்கத்தா (ஹால்டியா) ஆகிய 12 துறைமுகங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 200 சிறிய துறைமுகங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள தேவையான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டுக் கப்பல் பயணிகள் இந்தியத் துறைமுகங்களில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத்றையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

''சீனாவிலிருந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 452 கப்பல்கள் மற்றும் 16,076 பணியாளர்கள் மற்றும் பயணிகள் இதுவரை இந்தியத் துறைமுகங்களுக்கு வந்துள்ளனர்.

எந்தவொரு அபாயத்தையும் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகளையும் குழுவினரையும் இறங்க அனுமதிக்கவில்லை. ஆனால், கப்பல்கள் திட்டமிடப்பட்ட இடங்களில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்டன. கப்பல்களிலிருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

சீனாவில் இருந்து கப்பல்களில் பயணம் செய்த அல்லது பாதிக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட பயணிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் 16,076 பேர் இந்தியத் துறைமுகங்களில் இறங்க மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அதிகாரபூர்வமாக அனுமதி மறுத்துள்ளது.

அதேநேரம், காய்ச்சல் அல்லது அறிகுறிகள் ஏற்பட்டால் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் நங்கூரமிடப்பட்ட 452 கப்பல் பயணிகள் மற்றும் குழுவினருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணம் மேற்கொண்ட குழுவினர் / கடற்படையினருக்கு எந்த கடற்கரை பாஸும் வழங்கப்படவில்லை.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, கப்பல்களில் உள்ள அனைவரும் ஸ்கேன் செய்யப்படுகிறார்கள். தேவையான அனைத்து வசதிகளும் அவர்களுக்கு விரிவுபடுத்தப்படுகின்றன. கப்பலில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் அல்லது நோய் ஏற்பட்டால் அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

பாரதீப் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சீனக் கப்பலின் அதிகாரி செம்ஸ்டார் ஸ்டெல்லர் என்பவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது, மேலும், அவர் தனது மனைவியுடன் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டு கட்டாக்கின் எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தக் கப்பல் பிப்ரவரி 10 ஆம் தேதி சீனாவின் ஜாபுவிலிருந்து புறப்பட்டு மார்ச் 1 அன்று ஒடிசாவின் பரதீப் துறைமுகத்தை வந்தடைந்தது''.

இவ்வாறு கப்பல் போக்குவரத்துத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT