இந்தியா

கர்நாடக அரசு மாணவர் விடுதிகளில் `கலாம் படிப்பகம் தொடங்க திட்டம்

செய்திப்பிரிவு

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக கர்நாடக மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மாணவர் விடுதிகளில் `கலாம் படிப்ப‌கம்' தொடங்க திட்டமிடப் ப‌ட்டுள்ளது.

இதுகுறித்து பீஜப்பூர் மாவட்ட முதன்மை நிர்வாக அதிகாரி ஹெப்சிபா ராணி கொரல்படி, `தி இந்து'விடம் கூறியதாவது:

தேசத்தின் எல்லைகளை கடந்து உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற இளைஞர்களின் இதயத் துடிப்பாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திகழ்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்த அவர், தனது விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தார்.

கலாமின் சவால் மிகுந்த வாழ்க்கை, சாதனைகள், எதிர் கால கனவுகள் ஆகியவற்றை இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில், பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மாணவர் விடுதிகளில் `கலாம் படிப்பகம்' அமைக்கப்படும். இதில் அவர் எழுதிய நூல்கள், பல்வேறு இடங்களில் அவர் ஆற்றிய எழுச்சி மிகு உரை தொகுப்புகள் இடம்பெறும்.

மேலும் அப்துல் கலாம் பற்றிய ஒலி, ஒளி ஆவணத் தொகுப்பு களும், அவரது புகைப்படங்களும் வைக்கப்படும். குறிப்பாக கலாம் தொடர்பாக கன்னடத்தில் வெளி யாகியுள்ள அனைத்து நூல்கள், கட்டுரைகள் மட்டுமல்லாது ஊடக செய்திகளைக்கூட இதில் வைக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த திட்டத்துக்கு தொண்டு நிறுவனங்களும், வங்கிகளும், பதிப்பகங்களும் பல்வேறு உதவி களை வழங்க முன்வந்துள்ளன. இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத் திருப்பதால், மாநிலம் முழுவதும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT