உன்னாவ் சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இதனிடையே, பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி, சசி பிரதாப் சிங் என்பவரிடம் தன்னை வாகனத்தில் ஏற்றிச் சென்று கிராமத்தில் விடுமாறு கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சசி பிரதாப் சிங் தனது ஆதரவாளர்களை தொலைபேசியில் அழைத்தார். இதனால், அங்கு வந்த குல்தீப் செங்காரின் சகோதரர் அதுல் சிங் செங்கார் மற்றும் அவரது நண்பர்கள் பெண்ணின் தந்தையை தாக்கியதுடன் காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். பின்னர், அவர் இறந்தார்.
இது தொடர்பான வழக்கும் டெல்லி நீதிமன்றத்தில் நடந்தது. சம்பவத்தின்போது காவல் நிலைய போலீஸாரிடமும் பெண்ணின் தந்தைக்கு சிகிச்சையளித்த டாக்டரிடமும் குல்தீப் செங்கார் பேசியதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. இவ்வழக்கில் மாவட்ட நீதிபதி தர்மேஷ் ஷர்மா நேற்று தீர்ப்பளித்தார். கடுமையாக தாக்கப்பட்டதால் பெண்ணின் தந்தை உயிரிழந்தார் என்றும் எனினும் கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இல்லை என்றும் கூறிய நீதிபதி, வழக்கில் குல்தீப் செங்கார், அவரது சகோதரர் அதுல் சிங் செங்கார் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.