டெல்லியின் சாகித்திய அகாடமி அரங்கில் ‘கல்வெட்டுகளில் தேவதாசி’ எனும் நூலை கனிமொழி எம்.பி வெளியிட்டார். அப்போது அவர், தேவரடியாராக இருந்தவர்கள், தேவதாசிகளாக மாறியதற்கு சமூகம்தான் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நூலை, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் எஸ்.சாந்தினிபீ எழுதியிருந்தார். கனிமொழியிடம் இருந்து இந்நூலின் முதல் பிரதிகளை டெல்லி காவல்துறை இணை ஆணையர் க.ஜெகதீசன், உ.பி. காவல்துறையின் நொய்டா துணை ஆணையர் சு.ராஜேஷ் மற்றும் மத்திய செய்தி தகவல் தொடர்புத் துறையின் துணை இயக்குந ரான பி.அருண் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கடந்த 2-ம் தேதி மாலை நடந்த இந்நிகழ்ச்சியில் மக்களவை திமுக எம்.பி.க்கள் குழுவின் துணைத் தலைவருமான கனிமொழி பேசியதாவது:
தேவதாசிகள் பற்றி மக்களிடையே இருக்கும் தவறானக் கருத்தை மாற்றி உண்மையை அவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் எனும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தேவரடியார்கள் அக்காலங்களில் எப்படி மதித்து, போற்றப்பட்டார்கள் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு எழுதியதாக ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேவரடியார்கள் தொடர்பான பல கல்வெட்டுகளை ஆராய்ந்து அதன் கருத்துக்களை நூலில் முன்னெடுத்து வைத்துள்ளார்.
தேவதாசிகள் அன்றையக் காலக்கட்டத்தில் இன்றைய பெண்கள் கூட யோசித்துப் பார்க்காத அளவிலான சுகவாழ்க்கை வாழ்ந்ததாக இந்நூலில் குறிப்புகள் உள்ளன.
தேவதாசிகளாக மாறியபோது அவர்கள் இழிவாகக் கருதப்பட்டார்கள். அவ்வாறு அவர்களை ஈடுபடச் செய்த சமூகம்தான் வெட்கப்பட வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.
டெல்லி தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஏ.அண்ணாமலை, தேவதாசிகள் மீதான காந்தியின் கருத்துக்களுடன் வாழ்த்துரை வழங்கினார். டெல்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான வீ.ரெங்கநாதன் தலைமையிலான நிகழ்ச்சியில், ஜவகர்லால் நேரு பல்கலைகழகத் தமிழ் பேராசிரியர் இரா.அறவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.