வடகிழக்கு டெல்லியில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் பலியாக நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர், ஏராளமான கடைகள், வாகனங்கள் தீக்கிரையாகின. இது தொடர்பாக டெல்லி சிறுபான்மையினர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் சிறுபான்மைச் சமூகத்தினரின் உடைமைகளுக்கு கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறும் இந்த அறிக்கை, யமுனா விஹார் பகுதியில் இந்து, முஸ்லிம்கள் இருவரது உடைமைகளுக்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில அரசு அறிவித்திருக்கும் இழப்பீடு தொகை சேதங்களை ஒப்பிடும் போது குறைவானதுதான் எனவே அதனை அதிகரிக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த அறிக்கையில் சேதங்கள் பற்றி குறிப்பிடும்போது, “நாங்கள் நேரில் சென்று ஆய்வு நடத்திய இடங்களிலெல்லாம் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பட்டறைகள் பரவலாக கடும் சேதம் அடைந்துள்ளன. பிப்-24, 25 தேதிகளில் கலவரம் காரணமாக வெளியேறியவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை, காரணம் அவை கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இவர்களால் குறுகிய காலத்தில் கூட தங்கள் வீடுகளில் வசிக்க முடியாத நிலை உள்ளது.
யமுனா விஹார் பகுதியில் சாலையின் ஒரு பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள், இன்னொரு பகுதியில் இந்துக்களின் கடைகள் பகுதிகள் இரண்டு பகுதிகளுமே சூறையாடப்பட்டுள்ளன. எரிக்கப்பட்டுள்ளன. எரிக்கப்பட்ட பெட்ரோல் நிலைய உரிமையாளர் மகீந்தர் அகர்வால் தன்னுடைய இடத்தில் 30 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகக் கூறுகிறார்” என்று டெல்லி சிறுபான்மை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த ஆணையத்தின் தலைவர் ‘உண்மை அறியும் குழு’ அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும் என்றார், மேலும் இந்தக் குழுவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமைக் காப்புச் செயல்பாட்டாளர்கள், குடிமைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றார்.