ம.பி. காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ஷோபா ஓஜா. 
இந்தியா

மத்தியப் பிரதேச ஆட்சியைக் கலைக்க முயற்சி: குருகிராம் விடுதியிலிருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் மீட்கப்பட்டதாக காங். தகவல்

அசோக் குமார்

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியைக் கலைக்கும் முயற்சியாக 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் இருவர், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ ஒருவர் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் ஆகிய 8 எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேரை மீட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருகிராம் விடுதியில் வைக்கப்பட்டிருந்தவர்களில் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் ஷோபா ஓஜா கூறும்போது, “மாநில அரசைக் கலைக்கும் நோக்கத்துடன் மனேசார் விடுதியில் 8 எம்.எல்.ஏ.க்களைக் கடத்தி வைத்திருந்தனர், அதில் 4 காங். எம்.எல்.ஏ.க்களை மீட்டு ஆட்சிக்கலைப்பு முயற்சியை முறியடித்துள்ளோம். பிஎஸ்பி உறுப்பினர் ராம்பாயையும் மீட்டுள்ளோம் மீதி எம்.எல்.ஏ.க்களை பாஜக கர்நாடாகாவுக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது” என்றார்.

நேற்று நள்ளிரவு காங்கிரஸ் தலைவர்கள் மனேசார் விடுதிக்குச் சென்றனர், ஆனால் அங்கு மஃப்டியில் இருந்த போலீஸார் இவர்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை. ஆனால் 4 எம்.எல்.ஏ.க்களை ‘எப்படியோ’ மீட்டதாக காங்கிரஸ் தரப்பு கூறுகிறது.

ஷோபா ஓஜா கூறும்போது, “முதல்வர் கமல்நாத்தின் நல்லாட்சி பாஜக எம்.எல்.ஏ.க்களையே கவர்ந்துள்ளது. ஆனால் கல்வி மற்றும் சுரங்க மாஃபியாக்களுக்கு எதிரான எங்கள் அரசின் போர்க்கால நடவடிக்கையில் பாஜக பயந்து போயுள்ளது. காரணம் உண்மை வெளியே வந்தால் அவர்கள் தலைவர்களுக்கே சிக்கல், எனவே ஆட்சியைக் கலைக்க இப்படித் திட்டமிட்டனர்” என்றார்.

பாஜக இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

SCROLL FOR NEXT