20 ஆண்டுகளுக்குப் பின் தனது குருவிடம் ஆசி பெற்று விரதத்தை முடித்த பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா : படம் உதவி | ட்விட்டர். 
இந்தியா

ரூ.15 கோடியில் அனுமன் கோயில்: 20 ஆண்டுகளாக அரிசி, கோதுமை, பருப்பு சாப்பிடாமல் விரதம் முடித்த பாஜக தலைவர்: மக்கள் அனைவருக்கும் மெகா விருந்து

ஐஏஎன்எஸ்

நகரின் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகளாக அரிசி, பருப்பு, கோதுமை என தானியங்கள் ஏதும் சாப்பிடாமல் ரூ.15 கோடியில் அனுமன் கோயில் கட்டி முடித்தபின் தனது விரதத்தை பாஜக தலைவர் முடித்துள்ளார்.

அவர் வேறுயாருமல்ல பாஜக பொதுச்செயலாளரும், மேற்கு வங்க பாஜகவின் பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியாதான். கைலாஷ் விஜய்வர்கியா மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சாது ஒருவர் இந்தூர் நகரம் வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு பித்ரு தோஷம் காரணம். ஆதலால், ஒரு அனுமன் கோயில் கட்டினால் தோஷம் நிவர்த்தியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் கைலாஷ் விஜய் வர்க்கியா : படம் உதவி | ட்விட்டர்

இதையடுத்து, இந்தூர் நகரில் 72 அடி உயரத்தில் அனுமன் கோயில் கட்டுவேன் என்று விஜய்வர்கியா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நகர மேயராக இருந்தபோது சபதம் செய்தார். இந்தக் கோயிலில் எழுப்பப்படும் அனுமன் சிலை 8 விதமான உலோகங்களால் உருவாக்கப்படும். இந்தக் கோயிலைக் கட்டி முடிக்கும்வரை தான் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட எந்த வகையான தானியங்களையும் உண்ணப் போவதில்லை என்று சபதமிட்டார்.

இந்தூர் மக்களுக்காக மெகா விருந்து தயார் செய்யப்பட்ட காட்சி : படம் உதவி | ட்விட்டர்

ஏறக்குறைய 20 ஆண்டுகளாகத் தனது முயற்சியால் இந்தூரில் அனுமன் கோயிலை ரூ.15 கோடி மதிப்பில் விஜய்வர்கியா கட்டி முடித்துள்ளார்.

கோயில் கட்டி முடித்து நேற்று பூஜைகள் நடந்தன. அப்போது மஹாமந்தேஸ்வர் ஆவ்தேஷ்னாந்த் கிரி ஜி மகராஜ், மஹாமந்தேஸ்வர் ஜூன் அஹாராவின் முராரி பாபு, விரிந்தாவனின் மஹாமந்தேஸ்வர் குருஷரனாந்த் மகராஜ் ஆகியோர் முன்னிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் அரிசி, கோதுமை,பருப்பு கலந்த தானிய உணவை விஜய்வர்கியா சாப்பிட்டு தனது விரதத்தை முடித்தார்

கடந்த 20 ஆண்டுகளாக கைலாஷ் விஜய்வர்கியா கோதுமை, மைதா, அரிசி, சோளம் உள்ளிட்ட எந்த வகையான தானியத்தையும், தானியத்தால் செய்யப்பட்ட பொருட்களையும் சாப்பிடவில்லை என்பது வியப்புக்குரிய செய்தியாகும்.

இதற்குப் பதிலாக கைலாஷ் விஜய்வர்கியா பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள், பால் பொருட்கள் மட்டுமே சாப்பிட்டுள்ளார். விரதத்தை முறைப்படி கடைப்பிடிக்க அவரின் மனைவி ஆஷா வர்கியா பெரும் உதவி செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கோயில் கட்டி முடிக்கப்பட்டு தான் விரதம் முடிக்கும் நாளில் இந்தூரில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு வழங்க முடிவு செய்து மிகப்பெரிய விருந்துக்கு கைலாஷ் விஜய்வர்கியா ஏற்பாடு செய்திருந்தார்.

SCROLL FOR NEXT