இந்தியா

370-வது சட்டப்பிரிவு நீக்க விவகாரம்; மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டது உச்ச நீதிமன்றம்: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற மறுப்பு

செய்திப்பிரிவு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை 7 நீதிபதிகள் அல்லது 9 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி ‘பீப்பிள்ஸ் யூனியன் ஆப் சிவில் லிபர்ட்டிஸ்‘ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், ஜம்மு காஷ்மீர் பார் அசோசியேஷன் உட்பட சில தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது, ‘‘இந்த வழக்கை அதிக எண்ணிக்கை கொண்ட நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. காஷ்மீர் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அளித்த 2 தீர்ப்புகள் வெவ்வேறானவை. வெவ்வேறு பிரச்சினைகளைக் கொண்டவை. 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வதுதான் வழி’’ என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 7 அல்லது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்ற மறுத்து விட்டனர். மேலும், 370- சட்டப் பிரிவு நீக்கத்தை எதிர்த்து தொடுக் கப்பட்டுள்ள வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும் என்று உத்தரவிட்டனர்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 23 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.

SCROLL FOR NEXT