வெறுப்புணர்வை கைவிடுங்கள், சமூக வலைதளங்களை அல்ல என, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் அதிகமான அளவு சமூக ஊடகங்களில் ஆதரவாளர்களைக்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 53.3 மில்லியன் மக்களும், முகநூலில் 44 மில்லயனும், இன்ஸ்டாகிராமில் 35.2 மில்லியனும், யூடியூப்பில் 4.5 மில்லியனும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தான் பதவி ஏற்ற நாளில் இருந்து சமூக ஊடகங்களில் மிகவும் ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருகிறார். இளைஞர்களை ஊக்கப்படுத்துவது, தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் மக்களுடன் சமூக ஊடகங்கள் வழியாகப் பிரதமர் மோடி நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால், சில நேரங்களில் நாட்டில் நடக்கும் முக்கியச் சம்பவங்கள், நிகழ்வுகள், குறிப்பாக டெல்லி கலவரம், கும்பல் தாக்குதல் போன்றவற்றில் கருத்துகள் ஏதும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி இருப்பது சமூக ஊடகங்களில் பெரிதாக விமர்சிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் பிரதமர் மோடி ட்விட்டரில் நேற்று (மார்ச் 2) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "இந்த ஞாயிறன்று, அனைத்து சமூக ஊடகங்களான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருகிறேன். இது குறித்து விரைவில் உங்களிடம் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்த கருத்து குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், "வெறுப்புணர்வை கைவிடுங்கள், சமூக வலைதள கணக்குகளை அல்ல" என பதிவிட்டுள்ளார்.