டெல்லி வகுப்புக் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அனுமதி மறுக்கிறது என்று மக்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. மக்களவையில் காலை அலுவல்கள் தொடங்கியவுடன் டெல்லி வகுப்புவாதக் கலவரம் குறித்து காங்கிரஸ் பேச முயன்றபோது அதற்கு மக்களவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதனால், அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் அவை கூடியபோது காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் டெல்லி கலவரம் குறித்து மீண்டும் பேசவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யக்கோரியும் கோரிக்கை விடுத்தனர். அப்போது, காங்கிரஸ், பாஜக எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த மக்களவைத் தலைவர், அவையை இன்று நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
மக்களவையில் நடந்த சம்பவங்கள் குறித்து காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''டெல்லி நடந்த வகுப்புக் கலவரம் முக்கியமானது. அதில் நடந்த உயிர்ப்பலிகள் குறித்து உலகமே பேசுகிறது. ஆதலால் அது குறித்து மக்களவையில் விவாதிக்க கோரிக்கை விடுத்தோம். இந்தக் கலவரம் குறித்து விவாதம் நடத்துவதோடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் அவைக்கு வந்து விவாதத்தில் பங்கேற்றுப் பதில் அளிக்க வேண்டும். இதனை அனைத்து இந்தியர்களும் விரும்புகிறார்கள் என வலியுறுத்தினோம்.
டெல்லி கலவரம் குறித்து மத்திய அரசு தனது கருத்துகளை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், மத்திய அரசு எங்களைப் பேச விடவில்லை. ஜனநாயகம் மக்களவையில் துண்டுகளாகக் கழிக்கப்பட்டது. எங்கள் கருத்துகளைக் கூற அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் எங்கள் கட்சியைச் சேர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த கேரள எம்.பி.யை பாஜக எம்.பி. ஒருவர் தாக்கினார். அவர் கண்ணீர்விட்டுக்கொண்டே, மக்களவையில் இதுபோல் நடந்தால், வெளியே எங்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும் என்று வேதனைப்பட்டார்.
எங்களின் எதிர்ப்புத் தொடரும். டெல்லி கலவரத்துக்குப் பின்னால் இருக்கும் சதி என்ன என்பதை அறியும் வரை வெறுப்புப்பேச்சு பேசியவர்களை, கொலை செய்தவர்களை வெளிக்கொண்டு வரும் வரை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிப்போம்''.
இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் தன்னை பாஜக எம்.பி. ஜஸ்கவுர் மீனா தாக்கியதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.