பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

கோழிக்கறியில் கரோனா வைரஸ் பரவுமா?: வதந்தியால் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு ரூ.1,750 கோடி இழப்பு

பிடிஐ

கோழிக்கறியால் கரோனா வைரஸ் வரும் என்ற சில விஷமிகள் பரப்பிய வதந்தியாலும், பொய்யான செய்தியாலும் நாடுமுழுவதும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு ரூ.1,750 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கரோனா வைரஸுக்கும், கோழிக்கறிக்கும் தொடர்புப்படுத்தி வதந்தி பரப்பும் முன், கோழிக்கறி கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டிருந்தநிலையில், இந்த பொய்யான செய்திக்குப்பின், கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை குறைந்துள்ளது எனக் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் ஹூபே மாகாணத்தில் வுஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் இன்று உலகத்தையே மிரட்டி வருகிறது. சீனாவில் இதுவரை 2,900 பேர் உயிரிழந்துள்ளனர், 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

வூஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து கரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த விலங்குகள் மூலம் வைரஸ் மனிதர்களுக்குப் பரவும் என்பதைச் சீன தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது. ஆனால் அசைவ உணவுகள் உண்பதால் இந்த வைரஸ் பரவும் என்பது உறுதி செய்யப்படவில்லை.

அதுமட்டுமல்லாமல் இந்தியர்கள் கோழிக்கறியைய் சமைக்கும் முறை என்பது கொதிநீரில் வேகவைத்தோ அல்லது, பொறித்தோ சாப்பிடுகிறார்கள். அரைகுறையாக வேகவைத்து சாப்பிடுவதில்லை. ஆனால், சமீபகாலமாக விஷமிகள் சிலர் கோழிக்கறியைச் சாப்பிடுவதாலும், கோழிக்கறியின் மூலமும் கரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரப்பியுள்ளனர்.

இந்த தகவலை உண்மை என நம்பி பல்வேறு மாநிலங்களில் மக்கள் கோழிக்கறி சாப்பிடுவதைத் தவிர்த்தும், குறைத்தும் வருகின்றனர். இதனால் கோழிக்கறி விற்பனை கடந்த சில வாரங்களாகக் குறைந்ததோடு, கோழிப்பண்ணை வளர்ப்பு சார்ந்த தொழில்களும் கடுமையாகப் பாதிப்படையத் தொடங்கியுள்ளன. குறிப்பாக கோழித்தீவணம், முட்டை உற்பத்தி, கோழிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்ளிட்டவையின் விற்பனையிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து இந்தியக் கோழிப் பண்ணை கூட்டமைப்பின் (ஏஐபிபிஏ) தலைவர் பகதூர் அலி, மத்திய கால்நடை வளர்ப்புத் துறைக்குக் கடிதமும், கோரிக்கையும் வைத்துள்ளார்.

இதுகுறித்து பகதூர் அலி நிருபர்களிடம் கூறியதாவது:

கோழிக்கறி மூலமும், கோழியின் மூலமும் கரோனா வைரஸ் பரவும் என சில விஷமிகள் வதந்திகளையும், தவறான செய்திகளையும் பரப்பியுள்ளார்கள். இது வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தகர்த்து, கோழிக்கறி விற்பனையைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இந்த வதந்தியால் கோழிக்கறி கிலோ ஒன்றுக்கு ரூ. 30 வரை சராசரியாக விலை குறைந்துள்ளது. இதனால் பிராய்லர் கோழி வளர்ப்போர், அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அது சார்ந்த தொழில்கள் ஆகியவற்றுக்குக் கடந்த ஒரு மாதத்தில் ரூ.1,750 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது நாளுக்கு நாள் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது, இந்த வதந்திகளைத் தடுக்காவிட்டால், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் திவால் நிலைக்குச் சென்றுவிடுவார்கள்.

இதேபோன்ற போலிச் செய்திகளையும், வதந்திகளையும் தொடர்ந்து பரப்பிவந்தால், அதைத் தடுக்காவிட்டால் அடுத்த மாதமும் ரூ.1750 கோடி இழப்பு ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் கோழித்தீவனம், மச்காச்சோளம், சோயாபீன் போன்றவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகள், நாங்கள் தீவனம் வாங்காவிட்டால் அவர்களும் மிகப்பெரிய இழப்பைச் சந்திப்பார்கள். அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தை கோழிப்பண்ணையாளர்கள்தான். கடந்த ஒருமாதத்தில் மட்டும் கோழித்தீவண விலை ரூ.25லிருந்து ரூ.15 ஆகக் குறைந்துவிட்டது.

வங்கியில் வாங்கிய கடன் தொகையை 90 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் வராக்கடனில் சேர்த்துவிடுகிறார்கள். ஆதலால், உடனடியாக இதுபோன்ற வதந்திகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களுக்கும், அது சார்ந்த தொழில்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பைச் சரி செய்யச் சிறப்புக் கடன் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த தொழில் மட்டும் 10 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளார்கள், இதன் மூலம் நாட்டுக்கு ரூ.1.20 லட்சம் கோடி கிடைக்கிறது

இவ்வாறு பகதூர் அலி தெரிவித்தார்

SCROLL FOR NEXT