டெல்லி கலவரத்தில் வீடு இழந்த பிஎஸ் எப் வீரருக்கு ரூ.10லட்சம் வழங்கிய பிஎஸ்எப் ஐஜி உபாத்யாயா : படம் ஏஎன்ஐ 
இந்தியா

டெல்லி கலவரத்தில் வீடிழந்த வீரருக்கு திருமணப் பரிசாக ரூ.10 லட்சம் வழங்கிய பிஎஸ்எப் படை: 24 மணிநேரமும் உதவிக்கரம்: முதல்வர் கேஜ்ரிவால் அழைப்பு

பிடிஐ

டெல்லி வடகிழக்குப்பகுதி வகுப்புக் கலவரத்தில் வீடு இழந்த வீரருக்கு , ரூ.10 லட்சத்துக்கான காசோலையை எல்லை பாதுகாப்புப்படை(பிஎஸ்எப்) வழங்கியது.

டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த கலவரத்தில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஜிடி மருத்துவமனை, லோகியா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கலவரத்தில் ஏராளமான மக்கள் வீடுகளையும், உடைமைகளையும், கடைகளையும் பொருட்களையும் இழந்தனர். வீடுகள், கடைகள், பொதுச் சொத்துக்கள், தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன .

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜ்பூர், கோகல்பூரி, கஜுரி காஸ், பாஜன் பூர் ஆகிய பகுதிகள் கலவரத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

இதில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் முகமது அனீஸ் என்பவர் கலவரத்தில் தனது வீட்டை இழந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பிரிவில் முகமது அனீஸ் பணியாற்றி வருகிறார்.

திருமண ஏற்பாடு செய்யப்பட்ட சூழலில் வீரர் முகமது அனீஸ் கலவரத்தில் வீட்டை இழந்து ஆதரவின்றி இருந்தார். இதை அறிந்த எல்லைப் பாதுகாப்புப்படை(பிஎஎஸ்எப்) உடனடியாக அவருக்கு ரூ.10 லட்சத்தைத் திருமணப் பரிசாக வழங்கி, புதிய வீட்டில் குடியேற உதவி செய்துள்ளது.

இதுகுறித்து எல்லைப்பாதுகாப்புப் படையின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், " எல்லைப்பாதுகாப்புப் படை காவலர் முகமது அனீஸ் திருமணம் நிச்சயக்கப்பட்ட சூழலில் கலவரத்தில் வீட்டை இழந்தார். அவரையும், அவரின் தந்தை முகமது முனிஸ் ஆகியோரையும் அழைத்து, பிஎஸ்எப் ஐஜி டி.கே.உபாத்தியாயா, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்த காசோலை அவரின் திருமணப்பரிசாகவும், புதிய வீட்டில் குடியேறவும் உதவும்" எனத் தெரிவித்தார்

எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் அனீஸ் மேற்குவங்க மாநிலம், சிலிகுரியில் உள்ள ராதாபாரி எனும் இடத்தில் உள்ள பிஎஸ்எப் முகாமில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களைப் பகிர்ந்தால் உதவிகளை விரைவாக வழங்க இயலும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால் ட்வி்ட்டரில் விடுத்த கோரிக்கையில், " கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 24 மணிநேரமும் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் சேர்வதற்கு அவர்கள் குறித்த தகவல்களை விரைவாகச் சேர்ப்பது அவசியம். முழுமையான முகவரி, விவரங்களை அளித்தால் விரைவாகச் சேர்க்க முடியும்.

24 மணிநேரமும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன், கலவரத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூ.25 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT