இந்தியா

நாடு முழுவதும் அமைதியாக முடிந்தது சுதந்திர தின விழா

செய்திப்பிரிவு

நாடு முழுவதிலும் நேற்று நடைபெற்ற 69-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம், அசம்பாவித சம்பவங்களுக்கு இடமின்றி அமைதியாக நடந்து முடிந்தது

மாநில முதல்வர்கள் நலத் திட் டங்களை அறிவித்து மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்காக உறுதி மொழி பூண்டனர்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மத்திய அரசுக்கும், நகர அரசுக்கும் இடையே நெருக்கம் அவசியம் என்பதை வலியுறுத்தி னார்.தமது அரசின் 6 மாத கால சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது பேசியபோது, அரசமைப்புச்சட்டத்துக்கு உட்பட்டு மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும் அடையாளமும் வழங்கப்படவேண் டும் என்று கோரிக்கைவைத்தார்.

உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உரையாற்றிய போது, வளமான நாடாக இந்தியா வளர்ந்துவருகிறது இதில் உத்தரப்பிரதேசத்தின் பங்கு ஏராளம் என்றார்.

தெலங்கானா முதல்வர் கேசிஆர் உரையாற்றியபோது, மக்கள் நலத் திட்டங்களில் எல்லா மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தெலங்கானாதான் முதலிடம் பிடிக்கும். நடப்பு நிதியாண்டில் பல்வேறு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ. 28 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியபோது, தேசத்தின் நலனுக்காக மக்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று தெரிவித்தார்.

பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் கூறியபோது, பலவிதத்தில் விவசாயிகள் இன்னல் அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பிரதமர் நரேந்திர மோடி உதவவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மிசோரம் முதல்வர் லால் தன்ஹாவ்லா பேசியபோது, மாநிலத்தில் அமைதி ஏற்பட எல்லா வழிகளையும் அரசு பயன்படுத்தும். புதிய நிலப்பயன்பாட்டுக் கொள்கை நல்ல முன்னேற்றம் ஏற்பட உதவி உள்ளது என்றார்.

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தனது சுதந்திர தின உரையில், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும். பிறர் இரக்கப்பட்டு பிஹார் வளரப்போவது இல்லை. மாநில மக்களின் கடும் உழைப்பால் அதுவாகவே மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT