மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி : கோப்புப்படம் 
இந்தியா

'டெல்லி கலவரம் மத்திய அரசு ஆதரவுடன் நடந்த இனப் படுகொலை': மம்தா பானர்ஜி கடும் தாக்கு

பிடிஐ

டெல்லி வடகிழக்குப் பகுதியில் நிகழ்ந்த வகுப்புக் கலவரம் என்பது, ம்த்திய அரசே நிகழ்த்திய இனப் படுகொலை என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இப்போது இருந்த களப்பணிகளை மம்தா பானர்ஜி தொடங்கிவிட்டார். மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில், தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின்படி மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார்

இதன்படி மிகப்பெரிய அளவில் மக்கள் ஆதரவைத் திரட்டும் நோக்கில், "பங்ளார் கோர்போ மம்தா" (வங்காளத்தின் பெருமை மம்தா) என்ற பெயரில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 75 நாட்கள் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது

மாநிலம் முழுவதும் நடத்தப்படும் இந்தப் பிரச்சாரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட உள்ளனர். மேற்கு வங்கத்துக்கு மம்தா பானர்ஜியின் சேவை எந்த அளவுக்குத் தேவை, மம்தாவை மக்கள் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் ஆகியவை குறித்து இந்தப் பிரச்சாரத்தில் விளக்கப்படுகிறது.

மேலும், விரைவில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தப் பிரச்சாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு தொண்டர்களும், மக்களும் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் உதவி எண்களை மம்தா அறிவித்தார். இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். தீதியிடம் சொல்லுங்கள் (சகோதரி மம்தாவிடம் சொல்லுங்கள்) என்ற இந்தத் திட்டத்தில் சிறிது நாட்களிலேயே 10 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மம்தா பானர்ஜியிடம் நிருபர்கள் டெல்லி கலவரம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், "டெல்லி வகுப்புக் கலவரம் என்பது மத்திய அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இனப் படுகொலை. குஜராத்தில் செய்த கலவரத்தைப் போல் நாடு முழுவதும் நடத்துவதற்கு பாஜக முயல்கிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கொல்கத்தா வந்தபோது, அதில் பங்கேற்ற பாஜகவினர், கோலி மாரோ (சுட்டுத்தள்ளுங்கள்) என்ற கோஷத்தை எழுப்பியது கண்டிக்கத்தக்கது. டெல்லியில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது எனக்கு ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. என்னைப் பொறுத்தவரை இது இனப் படுகொலை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், அமித் ஷா அமைதியாக இருக்கிறார். டெல்லி கலவரத்துக்கு பாஜக மன்னிப்பு கோர வேண்டும்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT