இந்தியா

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: டெல்லி வன்முறை குறித்து பிரச்சினை எழுப்ப காங்கிரஸ் திட்டம்

செய்திப்பிரிவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது. இதில், டெல்லி வன்முறை தொடர்பாக பிரச்சினை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இதையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 11-ம் தேதி வரை நடந்தது. அன்றுடன் இந்த கூட்டத் தொடரின் முதல் அமர்வு முடிந்தது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக, டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, “டெல்லியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க மத்திய அரசு தவறிவிட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம். இந்த விவகாரத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகுமாறு தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.கே.ராகேஷ் கூறும்போது, “டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க வலியுறுத்தி அவை விதி 267-ன் கீழ் மாநிலங்களவை தலைவரிடம் நோட்டீஸ் வழங்கி உள்ளேன்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறும்போது, “பாஜக தலைவர்கள் பிரிவினையை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்தும் அவையில் கேள்வி எழுப்புவோம்” என்றார்.

42 பேர் உயிரிழப்பு

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கடந்த வாரம் கலவரம் மூண்டது. இதில்தலைமை காவலர், உளவுப் பிரிவு காவலர் உட்பட 42 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரம் மூண்டபோது அதைக் கட்டுப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழு கடந்த 27-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஒரு மனுவை சமர்ப்பித்தனர். அதில், டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி விலகுமாறு வலியுறுத்த வேண்டும் என கோரி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், டெல்லி கலவரம் குறித்து மத்திய அரசும் டெல்லி அரசும் பதில் அளிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு கடிதம்

காங்கிரஸ் அல்லாத பல்வேறு எதிர்க்கட்சியினரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் அமைதியை நிலைநாட்டுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் டெல்லி வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய உள் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.- பிடிஐ

SCROLL FOR NEXT