டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திந்துப் பேசும் வாழும் கலை ரவிசங்கர். 
இந்தியா

டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு

பிடிஐ

வடகிழக்கு டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த ஆன்மீகத் தலைவரான 'வாழும் கலை' ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ''வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்'' என்று கூறினார்.

வடகிழக்கு டெல்லியின் யாஃபிராபாத், மவுஜ்பூர், பாபர்பூர், சந்த் பாக், சிவ் விஹார், பஜன் புரா, யமுனா விஹார் மற்றும் முஸ்தபாபாத் பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக் கும் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.

இதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் காய மடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நூற்றுக்கணக்கான வீடுகளும், கடைகளும் தீக்கிரையாகியுள்ளன. ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. வெறிபிடித்த கும்பல் வீடுகள், கடைகள், வாகனங்கள், ஒரு பெட்ரோல் பம்ப் மற்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசியது.

இந்த சூழலில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் ஆயிரக்கணக் கான போலீஸாரும், துணை ராணுவப் படை யினரும் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப் பட்டுள்ளனர். மேலும், அங்கு ஒரு மாதக் காலத்துக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இன்று வடகிழக்கு டெல்லியின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆன்மீகத் தலைவரான வாழும் கலை ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வந்தார். அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசி ஆறுதல் வழங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் பிரம்மபுரிக்கு விஜயம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ​​வன்முறையால் இவ்வளவு பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதைப் பார்ப்பது மிகவும் கவலைக்குரியது. நாம் அவர்களை அதிர்ச்சியிலிருந்து விடுவித்து அவர்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பான பாதைக்குக் கொண்டு வர வேண்டும்.

மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக மனிதநேயத்துடன் செயல்பட்ட இந்த மக்களின் உதாரணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சமூக விரோத சக்திகளை ஓரங்கட்டி தண்டிக்க அவர்களை நாம் வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT