என்எஸ்ஜி விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா : படம் ஏஎன்ஐ 
இந்தியா

தீவிரவாதிகளை அவர்களின் இடத்திலேயே சென்று தாக்கும் வல்லமை மோடி அரசுக்கு உண்டு: அமித் ஷா புகழாரம்

ஐஏஎன்எஸ்

தீவிரவாதத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாத பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரவாதிகளை அவர்களின் இடத்திலேயே சென்று தாக்கும் வல்லமை இருப்பதால்தான் உலகளவில் மதிக்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

ராணுவ வீரர் ஒருவர் ரத்தம் சிந்தினால், அதற்கு தகுந்த பதிலடி இஸ்ரேல், அமெரிக்கா மட்டும்தான் கொடுக்க முடியும் என்ற கருத்தை இந்தியா மாற்றியுள்ளது என்று அமித் ஷா பெருமையுடன் குறிப்பிட்டார்

கொல்கத்தாவின் வடகிழக்கில் இருக்கும் ராஜர்ஹாட்டில் உள்ள தேசியப் பாதுகாப்புப் படை சார்பில் 29-வது சிறப்புப் பிரிவு தொடக்கவிழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பாதுகாப்பு விஷயத்தில் நாம் சிறப்பாகச் செயல்படுவதால், உலகளவில் இந்தியா மதிக்கப்படுகிறது. இந்திய வீரர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்குப் பதிலடி கொடுக்காமல் இந்தியா விடாது, எதிரிகளின் இடத்துக்குச் சென்று தாக்கும் வலிமை படைத்தது என்பதை உலக நாடுகள் உணர்ந்துவிட்டன.

துல்லியத் தாக்குதலுக்கு முன்பாக, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் மட்டுமே பாதுகாப்பில் சிறந்த நாடுகள், தங்கள் வீரர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் பதிலடி கொடுக்கும் என்று எண்ணப்பட்டது. ஆனால், துல்லியத் தாக்குதலுக்குப்பின், இந்தியா உலகளவில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரவாதத்தில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது. தீவிரவாதிகளின் இடத்திலேயே சென்று தாக்குதல் நடத்தும் வலிமையானது மோடி அரசு. இப்போதுதான் இந்த தேசம் துடிப்பான பாதுகாப்புக் கொள்கையைப் பார்க்கிறது. ஆனால், கடந்த 70 ஆண்டுகளாக வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இருந்தார்கள்,யாராலும் புரிந்த கொள்ள முடியவில்லை.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபின், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் தெளிவில்லாத பகுதிகள் சரிசெய்யப்பட்டன, தீர்மானிக்கப்பட்டன. இரு கொள்கைகளும் பிரிக்கப்பட்டன. உலக அமைதியை இந்தியா விரும்பும்போது, இந்தியாவின் எல்லையில் யாரும் வந்து அதன் அமைதியைக் குலைக்க அனுமதிக்கமாட்டோம்.

யாரேனும் நமது நாட்டு எல்லைகளை மீறினால், வீரர்களைக் கொலை செய்தால் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும். இதுபோன்ற கொள்கையை முதல்முறையாக இந்தியா கடைப்பிடித்துள்ளது.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

SCROLL FOR NEXT