தீ விபத்தில் சிக்கிக்கொண்ட தனது நாயைக் காப்பாற்ற முயன்றபோது ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு காஷ்மீரில் நடந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பகுதி ஒன்றில் தங்கியிருந்த ராணுவ அதிகாரியின் குடிசை ஒன்றில் நேற்றிரவு திடீரென தீவிபத்து சம்பவம் ஏற்பட்டது. இது குறித்து உயர் காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாரமுல்லா மாவட்டத்தின் குல்மார்க் பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். ராணுவத்துடன் தொடர்புகளை தரக்கூடிய எஸ்.எஸ்.டி.சி குல்மார்க்குடன் இணைக்கப்பட்ட கார்ப்ஸ் சிக்னல்கள் பிரிவின் மேஜராக அவர் பணியாற்றி வந்தரார். அவர்கள் இரண்டு நாய்களையுடன் உடன் வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவர்கள் தங்கியிருந்த குடிசையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அப்போது, மேஜர் அங்கித் புத்ராஜா, அவரது மனைவியையும் அவரது ஒரு நாயையும் மீட்டார்.
இதற்கிடையில் தீ அதிக அளவில் பரவத் தொடங்கிது. எனினும் இன்னொரு நாயையும் மீட்க வேண்டுமென அவர் மீண்டும் குடிசைக்குள் நுழைந்தார். எனினும் நாயை போராடி மீட்கும் போது, மேஜருக்கு 90 சதவீதம் வரை தீக்காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உள்ளூர் போலீசாரின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர்.
ராணுவ அதிகாரியின் உடல் மேலதிக மருத்துவ-சட்ட முறைகளுக்காக துணை மாவட்ட மருத்துவமனை டாங்மார்க்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயர் காவல் அதிகாரி தெரிவித்தார்.