டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் சுறுசுறுப்பாக மக்கள் இயங்கும் ஒரு ரயில் நிலையம் ராஜிவ் சவுக் நிலையம் ஆகும். இங்கு 6 பேர் ‘கோலி மாரோ’ என்று கோஷமிட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 6 பேரையும் போலீஸார் கைது செய்திருப்பதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவர்கள் 6 பேரும் வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்து கொண்டு ஆரஞ்சு நிற ஹெல்மெட் அணிந்திருந்ததாக வீடியோவில் பதிவாகி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
கோலிமாரோ என்றால் சுட்டுத்தள்ளுங்கள் என்பதுதான் அர்த்தம். பாஜக தலைவர் அனுராக் தாக்கூர் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது இதே வாசகத்தை பிரச்சாரத்தை மேற்கொண்டதையடுத்து பிரச்சாரத்திலிருந்து அவரை தேர்தல் ஆணையம் தடை செய்தது.
இது தொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுனவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலையத்தில் பணியிலிருந்த பாதுகாப்பு காவலர்கள் இவர்களை உடனடியாக டெல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்” என்று கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை 10.52 மணியளவில் நடந்ததாகவும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் எந்த வித போராட்டங்களுக்கோ, கோஷங்களுக்கோ அனுமதி இல்லை என்று டெல்லி மெட்ரோ நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.