இந்தியா

மகாராஷ்டிராவில் விவசாயி தற்கொலை: பள்ளியில் தற்கொலைக்கு எதிராக மகன் கவிதை வாசித்த சில மணிநேரங்களில் நேர்ந்த துயரம்

பிடிஐ

மகாராஷ்டிராவில் நேற்று மாலை கடன்தொல்லையால் 35 வயதான விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

புனே அருகே அகமதுநகரின் பதார்தி தாசிலில் 35 வயதான விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவத்திற்கு சில மணி நேரங்கள் முன்னதாகத்தான் அவருடைய மகன் பள்ளியில் விவசாய துயரத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் கவிதை வாசித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

நாட்டில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக மகராஷ்டிரா இருந்தாலும் அரசின் பல்வேறு உதவிகள், விழிப்புணர்வுகள் காரணமாக சமீப காலத்தில் தற்கொலை சம்பவங்கள் குறைந்துவந்தன. எனினும் மீண்டும் அத்தகைய நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நேற்று நடந்துள்ளது.

இதுகுறித்து பதார்டி காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பராஜ்வாடியில் வசிக்கும் மல்ஹாரி பத்துலே, ஓரிரு கடன்கள் நிலுவையில் உள்ளார், மேலும் அவர் வாங்கிய டிரக்கின் மாத தவணைகளும் நிலுவையில் உள்ளன. அதேநேரம் அவரது டிரக் திருடப்பட்டுவிட்டது.

இவை அனைத்தும் அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன. அவர் தனது சகோதரியின் திருமணத்திற்கு பணம் எடுத்திருந்தார். வியாழக்கிழமை மாலை அவர் விஷத்தை உட்கொண்டார் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்தார்.

அதே நாளில், பிப்ரவரி 27க்கான மராத்தி மொழி தினக் கொண்டாட்டம் ஒரு நாள் தள்ளி நேற்று பள்ளியில் கொண்டாடினர். அப்போது விவசாசி மல்ஹாரி பத்துலேவின் மகன் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் ஒரு கவிதையை வாசித்தார். அதற்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணிநேரங்கள்கூட மாணவனுக்கு நீடிக்கவில்லை என்பதுதான் சோகம். வீட்டுக்கு சென்றபோது அவருடைய தந்தை தற்கொலை செய்துகொண்ட செய்திதான் அவருக்கு கிடைத்தது.

இவ்வாறு பதார்டி காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT