டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து தங்குமாறு மாணவர்கள் அழைப்பு விடுக்க வேண்டாம் என துணைவேந்தர் ஜெகதீ்ஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களை ஜேஎன்யு பல்கலைக்கழக வளாத்திற்குள் வந்து தங்குமாறு மாணவர்கள் சிலர் அழைப்பு விடுத்தாக தகவல் வெளியானது. ஆனால் இதனை ஏற்க பல்கலை நிர்வாகம் மறுத்து விட்டது.
இதுபற்றி ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீ்ஷ் குமார் கூறியதாவது:
டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு அரசு மட்டுமின்றி அனைவரும் உதவ வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.
ஆனால் பல்கலைக்கழக வளாகம் என்பது பொதுவான இடம். மாணவ, மாணவிகள் தங்கியுள்ள பகுதி. இங்கு வெளியாட்கள் தங்கினால் பல்வேறு பிரச்சினைகள் எழக்கூடும். இதற்கு முன்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் அந்நியர்கள் வந்து தங்கியதால் பிரச்சினை ஏற்பட்டதாக இதே மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களை ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்குள் வருமாறு மாணவர்கள் யாரும் அழைப்பு விடுக்க வேண்டும். இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.