பாஜக தலைவர் நிதின் கட்கரி தொடுத்த அவதூறு வழக்கில் மீண்டும் பிணைப் பத்திரம் தர மறுத்ததால், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஜூன் 6-ம் தேதி வரை சிறையிலடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
'இந்தியாவின் மோசமான ஊழல் அரசியல்வாதிகள்' என்ற பட்டியலை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த ஜனவரி 31-ம் தேதி வெளியிட்டார். இந்தப் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி பெயரும் இடம்பெற்றிருந்தது.
கேஜ்ரிவால் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகக் கூறி அவர் மீது நிதின் கட்கரி அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி கேஜ்ரிவாலுக்கு டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க ரூ.10 ஆயிரத்துக்கு இணையான பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கு கேஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்த நிலையில், மே 22-ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை நடைபெற்றது. அப்போது, மீண்டும் கேஜ்ரிவால் ரூ.10 ஆயிரத்துக்கு இணையான பிணைப் பத்திரத்தை தாக்கல் செய்ய மறுத்தார். இதனால், அவரை ஜூன் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடிக்க டெல்லி பெருநகர நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோமதி மனோச்சா உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.