ராம்நாத் கோவிந்த் 
இந்தியா

ஆராய்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது: குடியரசுத் தலைவர் கவலை

செய்திப்பிரிவு

அறிவியல் ஆராய்ச்சிப் பணியில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்தார்.

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று அறிவியல் விஞ்ஞானிகள் மத்தியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, “கடந்த ஆண்டு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும்போது நான் ஹரிகோட்டா சென்றிருந்தேன். அப்போது பெண் விஞ்ஞானி ஒருவர் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதை கண்டேன். அவர் தனது 6 மாத மகனை தனது பெற்றோரிடம் கொடுத்துவிட்டு திட்டப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

மிகுந்த உத்வேகம் பெற்ற பெண் விஞ்ஞானிகள் இங்கு இருந்தபோதிலும் நாட்டில் அறிவியல் ஆராய்சி மற்றும் மேம்பாட்டுப் பணியில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. உலகில் அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் 30 சதவீதம் பேர் பெண்களாக உள்ள நிலையில் நம் நாட்டில் 15 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.

அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இந்த எண்ணிக்கையில் எந்த வேறுபாடும் இல்லை. என்றாலும் குறைந்த எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே ஆய்வுப் பணியில் தங்கள் பங்களிப்பை செலுத்துகின்றனர்.

அறிவியலில் பெண்கள் உயர் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பல்கலைக்கழகங்களில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறினார்.

SCROLL FOR NEXT