கோப்புப்படம் 
இந்தியா

டெல்லி கலவரம் குறித்து கள ஆய்வு செய்ய 5 பேர் குழுவை அமைத்தது காங்கிரஸ்

செய்திப்பிரிவு

டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக 5 பேர் அடங்கிய குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 39 பேர் வரை பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக 5 பேர் அடங்கிய குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று நியமித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், கட்சியின் டெல்லி பொறுப்பாளர் சக்திசிங் கோஹில், ஹரியாணா காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமாரி செல்ஜா, முன்னாள் எம்.பி. தாரிக் அன்வர், மகளிர் அணித் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 5 பேர் குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி கலவரம் தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. வன்முறை தொடர்பான முக்கிய ஆதாரங்களை திரட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன்பின் காங்கிரஸ் தலைமை அலுவலகம் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “டெல்லியில் இன்னும் எத்தனை உயிரிழப்புகள் ஏற்படும். வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரத்தை பாஜக இனிமேலாவது நிறுத்துமா” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினரின் ஆய்வறிக்கை சோனியா காந்தியிடம் சமர்ப்பிக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறும்போது, “கடந்த 4 நாட்களாக டெல்லியில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.” என்று குற்றம் சாட்டினார்.- பிடிஐ

SCROLL FOR NEXT