இந்தியா

இந்தியாவிலேயே மிகப்பெரிய கம்பீர ‘கஜரத்னா’; குருவாயூர் கோயில் யானை பத்மநாபன் 84 வயதில் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

இந்தியாவிலேயே மிகப்பெரிய யானை, கம்பீர கஜரத்னா எனப் பட்டம் பெற்ற கேரள மக்களால் நேசிக்கப்பட்ட குருவாயூர் கோயில் யானை பத்மநாபன் 84 வயதில் நேற்று உயிரிழந்தது.

1936-ம் ஆண்டு கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நிலம்பூர் காட்டில் பிறந்தது பத்மநாபன் யானை. இந்த யானையை ஆலத்தூரில் உள்ள ஒருவர் வளர்த்து வந்தார். 18 வயது ஆகும்போது 1954-ம் ஆண்டு அவரிடம் இருந்து ஒற்றப்பாலத்தைச் சேர்ந்த இ.பி.சகோதரர்கள் வாங்கி குருவாயூர் கோயிலுக்கு வழங்கினார்கள்.

1954-ம் ஆண்டு முதல் குருவாயூர் கோயிலில் மற்ற யானைகளுடன் இருந்த பத்மநாபனுக்கு 1962-ம் ஆண்டு முதல் குருவாயூர் கோயில் சுவாமியைத் தன் முதுகில் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பெருமை வழங்கப்பட்டது.

18 வயதில் குருவாயூர் கோயிலுக்கு வழங்கப்பட்ட பத்மநாப யானையின் கம்பீரம் பக்தர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. வருடங்கள் ஏற ஏற அதன் கம்பீரமும் ஏறியது. மிகப்பெரிய உருவத்துடன் பிரம்மாண்டமாக நடந்து வரும் பத்மநாபனை முதலில் பார்க்கும் யாரும் அச்சத்துடன்தான் அணுகுவார்கள். ஆனால் அதன் குழந்தை உள்ளம், யாருக்கும் தீங்கு செய்யாத மனது, பக்தர்களை அதை நோக்கி வரச் செய்தது.

அதன் நெடிதுயர்ந்த தோற்றத்தாலும், பிரம்மாண்ட உருவத்தாலும் நாட்டில் வளர்க்கப்படும் யானைகளிலே மிகப்பெரிய யானை என்ற பெயரைப் பெற்றது. அதன் தோற்றத்தை வைத்து தேவசம்போர்டு 'கஜரத்னா' என்ற பட்டத்தை 2004-ம் ஆண்டு பத்மநாபனுக்கு வழங்கியது. இவை தவிர மேலும் பல விருதுகளையும் பெற்றது ‘கஜ்ரத்னா’பத்பநாபன் யானை.

பாகன் அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாரையும் தொல்லைப்படுத்தாமல் அமைதியாக இருக்கும் பத்மநாபன். இதனால் குருவாயூர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பத்மநாபனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதையும் விரும்பினர். பத்மநாதபன் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். மேலும் சிலர் கம்பீரமான அதன் புகைப்படத்தை விரும்பி வாங்குவார்கள்.

பத்மநாபன் எவ்வளவு பிரசித்தி பெற்ற யானை என்றால் மற்ற கோயில்களுக்கு யானைகளை வாடகைக்கு அனுப்புவதுபோன்று அதை அனுப்ப மாட்டார்கள். அவ்வளவு கம்பீரமிக்க யானை அது. ஆனாலும் சிலர் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டதால் 2010-ல் பாலக்காட்டில் நடந்த விழாவுக்காக பத்பநாபன் யானை அழைத்துச் செல்லப்பட்டது. அதற்கு வாடகையாக ரூ.2,25,000 வசூலிக்கப்பட்டது. அதையும் தரத் தயாராக இருந்தார்கள். இதன் மூலம் அதிக மதிப்புமிக்க யானை என்ற பெயரையும் தட்டிச் சென்றது பத்மநாபன்.

ஆண்டுகள் கடந்தன. 1936-ல் பிறந்த பத்மநாபனுக்கு 84 வயது ஆன நிலையில் வயது முதிர்வு காரணமாகத் தளர்ந்துபோய் சோர்வாக இருந்தது. அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று திடீரென உயிரிழந்தது. பத்மநாப யானை இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட பக்தர்கள் கோயில் முன் திரண்டனர்.

பத்மநாபனுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது யானைப் பாகன் விஜயன்தான். ‘இனி எப்போது பத்மநாபன் கம்பீரமாக எழுந்து நிற்பதைப் பார்ப்பேன்’ என அவர் கதறி அழுதது பக்தர்களைக் கலங்க வைத்தது. சமூக வலைதளங்கள் வழியாகவும் பத்மநாப யானைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT