இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரின் ராஜதர்மா என்பது சமத்துவம், நல்லிணக்கம் சார்ந்தது. பாஜக, பிரித்தாளும் மனநிலை கொண்டது என காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் 42 பேர் வரை பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது கடமையைச் சரியாகச் செய்யாததால்தான் இந்தப் பெரும் கலவரம் ஏற்பட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அதுமட்டுமல்லாமல் அமித் ஷா பதவி விலகும்படி வலியுறுத்தியது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சந்தித்துப் பேசி, அமித்ஷா ராஜினாமா செய்யக்கோரி மனு அளித்தனர்.
அப்போது நிருபர்களுக்குப் பேட்டி அளித்த சோனியா காந்தி, "மத்திய அரசு சாதி, மதம், பாகுபாடின்றி அனைத்து மக்களையும் பாதுகாக்கும் ராஜதர்மத்தைக் காக்க வேண்டும். அனைத்து நம்பிக்கை உள்ளவர்களையும் சமமாக நடத்த வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
சோனியா காந்தி பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், "தயவுசெய்து ராஜதர்மத்தைப் பற்றி எங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டாம். அவரின் சாதனை முழுவதும் குழப்பங்களும், திருப்பங்களும் நிறைந்தவை எனத் தெரியும்" என பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், " எங்கள் தலைவர்கள் இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரின் ராஜதர்மம் என்பது சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பதுதான். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? முன்கூட்டியே ஒரு விஷயத்தில் கருத்தை உருவாக்கிக் கொண்டு, பிரித்தாளும் மனநிலையில் இருக்கிறீர்கள்" எனத் தெரிவித்துள்ளது.