மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே : கோப்புப்படம் 
இந்தியா

டெல்லி கலவரம் நடந்தபோது அமித் ஷா எங்கே போயிருந்தார்?, நாடாளுமன்றத்தில் பேசினால் தேச விரோதமா? சிவசேனா சரமாரி கேள்வி

பிடிஐ

டெல்லியில் மிகப்பெரிய வகுப்புக் கலவரம் நடந்தபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எங்குமே பார்க்க முடியவில்லை. அவர் எங்கு சென்றிருந்தார் என்று சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லி கலவரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எழுப்பினால் அதை தேசவிரோதம் என்று சொல்வார்களா என்று சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடானா சாம்னாவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக ஷாகின் பாக் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லி வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் பெரும் வகுப்புக் கலவரமாக மாறியது. இதில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள்.

டெல்லியில் நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது. டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு மெல்ல, இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்நிலையில், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடேனா சாம்னாவில் டெல்லி கலவரத்தைக் கட்டுப்படுத்த அமித் ஷா தவறிவிட்டதாகக் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அந்த நாளேட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

''டெல்லி தேர்தல் நடந்தபோது, தேர்தல் பிரச்சாரத்துக்காக அமித் ஷா நீண்டநேரம் ஒதுக்கினார். வீடு வீடாகச் சென்று பாஜக ஆதரவாளர்களுக்கு வாக்கு சேகரிக்கத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். ஆனால், டெல்லியில் வகுப்புக் கலவரம் நடந்து அங்கு மோசமான சூழல் நிலவிய போதும், அரசு சொத்துகள், தனியார் சொத்துகள் தீக்கிரையான போதும், ஏராளமான உயிர்கள் பலியானபோதும் அமித் ஷாவை எங்கும் காண முடியவில்லை. அவர் எங்கு சென்றார்?

ஒருவேளை, காங்கிரஸ் கட்சியோ அல்லது வேறு எந்தக் கட்சியோ மத்தியில் ஆட்சியில் இருந்து, பாஜக எதிர்க்கட்சியாக இந்த நேரத்தில் இருந்திருந்தால், உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக நிச்சயம் மிகப்பெரிய ஊர்வலத்தையும், கண்டனப் பேரணியையும் நடத்தி இருக்கும்.

ஆனால், இப்போது அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. ஏனென்றால் பாஜக ஆட்சியில் இருக்கிறது. எதிர்க்கட்சியினர் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள். இருப்பினும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமித் ஷாவின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இவ்வளவு பெரிய கொந்தளிப்பான சூழல் நடந்த நிலையில் மத்திய அரசு காலதாமதத்துடனே பதில் அளிக்கிறது. கலவரம் நடந்தபோது அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும் பரபரப்பில் அமித் ஷா இருந்தபோதுதான், உளவுத்துறை அதிகாரி டெல்லி கலவரத்தில் கொலை செய்யப்பட்டார்.

கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டு 3 நாட்களுக்குப் பின்புதான் பிரதமர் மோடி மக்களிடம் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லி வீதிகளில் வந்து மக்களிடம் பேசினார். எல்லாம் நடந்து முடிந்த பின், சேதங்கள் ஏற்பட்டு முடிந்த பின் நடவடிக்கை எடுத்து என்ன பயன்?

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் பாஜக அரசைச் கேள்வி கேட்பார்கள். டெல்லி கலவரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பினால், அதே தேசவிரோதம் என்று சொல்வீர்களா? டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் அனைத்தும் வேதனையளிக்கின்றன''.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT