கோவிட் - 19 வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக, சீனாவின் வூஹான் நகரில் தங்கியிருந்த 76 இந்தியர்கள் உட்பட 112 பேர் விமானப்படை விமானத்தின் மூலமாக நேற்று டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரத்தில்தான் முதன்முதலில் கோவிட் - 19 வைரஸ்பரவத் தொடங்கியது. பின்னர், படிப்படியாக சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் அந்த வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்தக் காய்ச்சலுக்கு இதுவரை அங்கு 2,744பேர் உயிரிழந்திருக்கின்றனர். 78,497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வூஹான்நகரில் வசித்து வந்த 650 இந்தியர்களை ஏர்-இந்தியா விமானம் மூலமாக மத்திய அரசு அண்மையில் மீட்டது. எனினும், அந்நகரில் 70-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்தனர்.
எனவே, அவர்களை மீட்பதற்காகவும், சீனாவில் கோவிட் - 19வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காகவும் ராணுவ சரக்கு விமானத்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த விமானம் கடந்த 20-ம்தேதி சீனா செல்ல இருந்த நிலையில், அந்நாட்டு அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் அன்றைய தினம், சீனாவுக்கு விமானம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அதற்குஅடுத்து ஒவ்வொரு நாளும் இந்தியத் தரப்பில் இருந்து அனுமதி கோரப்பட்ட போதிலும் சீனா இசைவு வழங்க மறுத்து வந்தது. இதன் காரணமாக, வூஹான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக, இந்திய ராணுவ விமானம் செல்வதற்கு சீன அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17 ரகராணுவ சரக்கு விமானம் சீனாவின்வூஹான் நகருக்கு நேற்று முன்தினம் மாலை சென்றடைந்தது. பின்னர், அங்கிருந்த சீன அதிகாரிகளிடம் 15 டன் எடைகொண்ட மருத்துவ உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வூஹான்நகரில் தங்கியிருந்த 76 இந்தியர்கள், 36 வெளிநாட்டினர் என மொத்தம் 112 பேருடன் ராணுவ விமானம் டெல்லிக்கு நேற்று அதிகாலை திரும்பியது.
மீட்கப்பட்ட வெளிநாட்டினரில் 23 பேர் வங்கதேசத்தையும், 6 பேர்சீனாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.மாலத்தீவு, மியான்மர் நாடுகளைச் சேர்ந்த தலா 2 பேர், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மடகாஸ்கர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 36 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள இந்தோ - திபெத்எல்லைக் காவல் படை சிறப்புமுகாம்களில் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிலிருந்து 124 பேர் மீட்பு
இதேபோல், ஜப்பானின் யோகோஹமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் இருந்து 124 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டினர் ஏர்-இந்தியாவிமானம் மூலம் நேற்று மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர்.