டெல்லி கலவரத்தை ஆம் ஆத்மி கவுன்சிலர் முகமது தாஹிர் உசேன் (42) முன்னின்று நடத்தியதாகவும் உளவுத் துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் (26) கொலையில் அவருக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சியின் 59-வதுவார்டான நேரு விஹார் கவுன்சிலராக முகமது தாஹிர் உசேன் பதவி வகிக்கிறார். முஸ்தபாபாத் பகுதியில் உள்ள 5 மாடிகள் கொண்ட வீட்டில் இவர் வசிக்கிறார். இவரது வீட்டுக்கு அருகே பாஜக முன்னாள் கவுன்சிலர் மேகக் சிங்கின் குடோன் உள்ளது. இந்தகுடோனில் ஏராளமான கார்கள்நிறுத்தப்பட்டிருந்தன. கலவரத்தின்போது இந்த கார்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சிலரின்வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தாஹிர் உசேன் வீட்டுக்கு எவ்வித சேதமும் இல்லை.
அவரது வீட்டில் இருந்து பெட்ரோல் குண்டுகள், அமிலம், கத்தி,அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாயில் உளவுத் துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
காலையில் பணிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பிய அன்கிட் சர்மாவை காணவில்லை. அவரைகவுன்சிலர் முகமது தாஹிர் உசேன் தலைமையிலான கும்பல் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை கவுன்சிலர் முகமது தாஹிர் உசேன் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, "கடந்த 24-ம்தேதி எனது வீட்டை ஒரு கும்பல் முற்றுகையிட்டது. நான்போலீஸாரிடம் உதவி கோரினேன். போலீஸார் விரைந்து வந்து என்னையும் எனது குடும்பத்தினரையும் மீட்டு அழைத்துச் சென்றனர். கடந்த 25-ம் தேதி வீட்டுக்கு திரும்பியபோது கலவரம் அதிகரித்திருந்தது. போலீஸாரின் அறிவுரைப்படி நான் எனது வீட்டுக்கு செல்லவில்லை. எனக்கும் கலவரத்துக்கும் துளியும் தொடர்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கத்தை பாஜக வட்டாரங்கள் மறுத்துள்ளன. கலவரத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரமாக முகமது தாஹிர் உசேன் கையில் தடியுடன் இருக்கும் புகைப்படத்தை பாஜக வட்டாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளன.
இந்த பின்னணியில் கவுன்சிலர் முகமது தாஹிர் உசேனின் வீட்டுக்கு போலீஸார் நேற்று சீல் வைத்தனர். உளவுத் துறை அதிகாரி கொலை குறித்தும் கவுன்சிலர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் குறித்தும் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், கோபால் ராய் டெல்லியில் நேற்று கூறும்போது, "கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முகமது தாஹிர் உசேன்அல்லது கபில் மிஸ்ரா, யாராகஇருந்தாலும் மதம், சாதி பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தனர்.