இந்தியா

அரசியலை விடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த பணியாற்றுங்கள்: கேஜ்ரிவாலுக்கு மாயாவதி அறிவுரை

செய்திப்பிரிவு

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மற்ற மாநிலங்களில் அரசியல் செய்வதை விடுத்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லியில் இயல்பு நிலை திரும்ப தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஏற்கெனவே பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் இறந்தநிலையில் மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் நடந்த கலவர விஷயத்தில் அரசில் கட்சிகள் மிக மோசமான அரசியல் செய்கின்றன. மக்கள் பிரச்சினையை கவனத்துடன் அணுகி அமைதி திரும்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும். டெல்லி போலீஸார் தங்கள் கடமையை செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

டெல்லி போலீஸாருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் டெல்லி முதல்வரின் பணி மிக முக்கியமானது. மற்ற மாநிலங்களில் அரசியல் செய்வதை விட்டு விட்டு அவர் சொந்த மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தவும், அமைதி திரும்பவும் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு மாயாவதி கூறினார்.

SCROLL FOR NEXT