புதுடெல்லி: தஞ்சாவூரில் உள்ள உணவுத் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு தேசிய முக்கியதுவம் அந்தஸ்து வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அரசின் பல்வேறு திட்டங்கள், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. அந்த வகையில், ஹரியாணா மாநிலம் கண்ட்லி மற்றும் தமிழகத்தின் தஞ்சாவூரில் அமைந்துள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ‘தேசிய முக்கியத்துவ அந்தஸ்து’ வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இதேபோல், வாடகைத் தாய் மசோதாவுக்கும் மத்திய அமைச்சரவையில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. வாடகை தாய் முறையில் பல்வேறு குளறுபடிகளும், மோசடிகளும் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, இதனை சரிசெய்யும் விதமாக வாடகை தாய் ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. இந்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் பெரும்பாலான உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா அங்கு நிறைவேறவில்லை. குறிப்பாக, இந்த மசோதாவில் இடம்பெற்றிருந்த இரண்டு அம்சங்களை நீக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அதாவது, வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட தம்பதியினருக்கு நெருங்கிய உறவு முறையில் இருக்கும் பெண்ணையே தேர்வு செய்ய வேண்டும்; 5 ஆண்டுகள் வரை குழந்தை இல்லாத தம்பதியினரே இந்த வாடகை தாய் முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் ஆகிய இரண்டு அம்சங்களை நீக்குமாறு கோரப்பட்டது.
இதையடுத்து, இந்த மசோதாவானது மாநிலங்களவை தேர்வுக் குழுவுக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மேற்குறிப்பிட்ட இரண்டு அம்சங்களும் நீக்கப்பட்டன. இந்நிலையில், திருத்தங்களுடன் கூடிய இந்த வாடகைத் தாய் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. எனவே, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.