வடகிழக்கு டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் உளவுத் துறை அதிகாரி ஒருவர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். அவரது உடல், டெல்லி சந்த் பாக் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து நேற்று மீட்கப்பட்ட பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
மத்திய அரசின் உளவுத் துறையில் (ஐபி) பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்தவர் அங்கிட் சர்மா (26). வடகிழக்கு டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வந்தார்.
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே நேற்று முன்தினம் 3-வது நாளாக மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பிய அங்கிட் சர்மா, தங்கள் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக வெளியில் சென்றார். அப்போது குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களிடம் சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் கூறும்போது, “அங்கிட் சர்மா போராட்டக்காரர்களால் கத்தியால் குத்தப்பட்டார். பிறகு கழிவு நீர் கால்வாயில் தள்ளப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற நண்பர்களையும் போராட்டக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். போராட்டக்காரர்கள் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். எவரையும் அவர்கள் அங்கிட் சர்மாவை நெருங்கவிடவில்லை” என்றார்.
அங்கிட் சர்மாவின் தந்தை தேவேந்திர சர்மா, டெல்லி காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.