டெல்லி சட்டப்பேரவையில் முதல்வர் கேஜ்ரிவால் பேசிய காட்சி : படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

டெல்லி மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது; உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி, அரசு வேலை: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு

பிடிஐ

டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கும்போது மனது வலிக்கிறது. விரைவில் டெல்லி இயல்பு நிலைக்கு வரும். கலவரத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 3 நாட்களாக நடந்த கலவரத்தில் இதுவரை ஒரு தலைமைக் காவலர் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்ட போலீஸார், பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் சாந்த்பாக் பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையில், புலனாய்வுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உடல் இன்று மீட்கப்பட்டது.

இதுகுறித்து அறிந்த முதல்வர் கேஜ்ரிவால் மிகுந்த மனவேதனையுடன் ட்விட்டரில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக கேஜ்ரிவால் கூறுகையில், " உளவுத்துறை அதிகாரியின் மரணம் மிக சோகமானது. குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.

ஏற்கெனவே 20க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோய்விட்டன. டெல்லி மக்களும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்க்கும்போது மனது வலிக்கிறது. இந்த சோகத்திலிருந்தும் சேதத்திலிருந்தும் விரைவில் மீள்வோம். ஒன்றாக இணைந்து மக்களுக்கும், சமூகத்துக்கும் பணியாற்றுவோம்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே டெல்லி சட்டப்பேரவையில் டெல்லி கலவரம் குறித்து முதல்வர் கேஜ்ரிவால் பேசினார். அப்போது அவர் கூறுகையில், " தலைநகர் டெல்லியில் நடந்த கலவரத்தில் இந்துக்களும், பயன்பெறவில்லை. முஸ்லிம்களும் பயன்பெறவில்லை. ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். 20-க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்திருக்கிறோம்.

இந்துக்களும், முஸ்லிம்களும் கலவரத்தில் உயிரிழந்துள்ளார்கள். தலைமைக் காவலர் ஒருவரும் இறந்துள்ளார். காயமடைந்தவர்கள் பட்டியலில் இந்துக்களும் இருக்கிறார்கள். முஸ்லிம்களும் இருக்கிறார்கள். போதும், போதும், வெறுப்பு அரசியல், கலவர அரசியல் வீடுகளை எரிப்பது அனைத்தையும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.

இரு வழிகள்தான் உள்ளன. மக்கள் ஒற்றுமையாக வந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து சூழலைச் சிறப்பாக மாற்ற வேண்டும், அல்லது, ஒருவரை ஒருவர் தாக்கி, கொலை செய்வது. நவீன கால டெல்லியை மனித சடலங்களால் எழுப்ப முடியாது.

வன்முறையைப் புறந்தள்ளிவிட்டு, மக்கள் தங்கள் பகுதிக்குள் புதிதாக அந்நியர்கள் யாரேனும் வந்தால், போலீஸாருக்குத் தெரிவியுங்கள்.

அதேபோல கலவரத்தில் சமூக விரோதிகளுக்கு போலீஸார் உதவியது கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸாரிடம் ஏன் வன்முறையைத் தடுக்கவில்லை என்று விசாரித்தால், எங்களுக்கு எந்தவிதமான உத்தரவும் மேல்மட்டத்தில் இருந்து கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். எந்த போலீஸாராவது சமூக விரோதிக்கு உதவியிருந்தால், அது காவல்துறைக்கே எதிரானது.

டெல்லி மக்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள்தான் எங்கள் பொறுப்பு, அன்புற இந்த மண்ணில் டெல்லி மக்கள் வாழ வேண்டும். ஒவ்வொரு மதத்தினரும், சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்.

டெல்லி மக்கள் வன்முறையை விரும்பவில்லை. இந்த வன்முறையை ஆம் ஆத்மி செய்யவில்லை. சில சமூக விரோத சக்திகள், அரசியல் பின்புலம் கொண்ட சக்திகள் செய்துள்ளன. இந்துக்களும் முஸ்லிம்களும் சண்டையிடுவதை டெல்லி மக்கள் விரும்பவில்லை.

டெல்லி கலவரத்தில் பலியான காவலர் ரத்தன் லால் குடும்பத்தை டெல்லி அரசு பாதுகாக்கும். அவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்’’.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார்.

SCROLL FOR NEXT