டெல்லி மாநில பாஜக தலைவர் கபில் மிஸ்ரா : கோப்புப்படம் 
இந்தியா

டெல்லி வன்முறை: பாஜக தலைவர்கள் 3 பேர் மீது எப்ஐஆர்; கபில் மிஸ்ரா வீடியோவைப் பார்த்த நீதிபதிகள்

பிடிஐ

டெல்லி வடகிழக்குப் பகுதியில் நடந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள், தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை இன்று டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. பாஜக தலைவர்கள் 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

மேலும், பாஜக மாநிலத் தலைவர் கபில் மிஸ்ரா சிஏஏ ஆதரவாளர்களிடையே பேசிய பேச்சு தொடர்பான வீடியோவை நீதிமன்ற அறையில் ஒளிபரப்பி நீதிபதிகள் பார்த்தபின் இந்த அறிவுரை வழங்கப்பட்டது.

டெல்லி கலவரம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ் மந்தர், சமூகச் செயற்பாட்டாளர் பரா நக்வி ஆகியோர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். அதில், டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு டெல்லியில் நடக்கும் வன்முறை தொடர்பாக வன்முறையாளர்கள் மீதும், வன்முறையைத் தூண்டிவிட்டவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், பாஜக தலைவர்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் சர்மா, கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுப்புணர்வுடன் பேசியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி போலீஸ் துணை ஆணையர் ராஜேஷ் தியோவும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது நீதிபதி முரளிதர் , "பாஜக தலைவர் கபில் மிஸ்ரா பேசிய வீடியோவைப் பார்த்தீர்களா?" எனக் கேட்டார். அப்போது துஷார் மேத்தா, ''நான் தொலைக்காட்சியில் அந்தக் காட்சிகளை இன்னும் பார்க்கவில்லை'' என்றார். போலீஸ் அதிகாரி தியோ, "நான் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா பேசியதைத்தான் பார்த்தேன். கபில் மிஸ்ரா பேசிய வீடியைவைப் பார்க்கவில்லை" எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி முரளிதர், "டெல்லி போலீஸாரின் நிலையைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கிறது. நீதிமன்ற அறையிலேயே கபில் மிஸ்ரா பேசிய வீடியோ ஒளிபரப்பாகட்டும்" எனத் தெரிவித்தார். நீதிமன்ற அறையில் கபில் மிஸ்ரா பேசிய வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகின.

அதன்பின் நீதிபதி முரளிதர் கூறுகையில், "பாஜக தலைவர்கள் பேசிய கருத்துகளைப் பார்த்திருப்பார் என்று நினைக்கிறோம், நடவடிக்கை எடுப்பதற்கு யாரையாவது அவர் அணுக வேண்டிய அவசியம் இருக்கிறதா? சட்ட அதிகாரியாக பாஜக தலைவர்கள் 3 பேர் மீது உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமா அல்லது அவசரம் இல்லையா என்று சொல்லுங்கள்" எனக் கேட்டனர்.

இன்று பிற்பகலில் மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

SCROLL FOR NEXT