பிஹாரில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 243 தொகுதிகளுக்கான பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று (திங்கள்கிழமை) கூடுகின்றனர்.
இதில் கடுமையான இழுபறி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹாரின் லோக்ஜன சக்தி மற்றும் ராஷ்ட்ரிய லோக் சமதா ஆகிய கட்சிகளுடன் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு நல்ல பலன் கிடைத்தது.
இதனால், அம் மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் இவர்கள் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இவர்களுடன் பிஹாரின் முன்னாள் முதல் அமைச்சரும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சியும் இணைந்துள்ளார்.
ஆனால், இவர்களுக்கு இடையிலான தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை. இதன் மீது கடந்த ஒரு மாத காலமாக கீழ்மட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இனி, அதன் மீது கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முதன்முறையாக ஆகஸ்ட் 31-ல் கூடி பேச உள்ளனர். பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் லோக்ஜன சக்தியின் ராம்விலாஸ் பாஸ்வான், ராஷ்ட்ரிய சமதாவின் உபேந்திரா மற்றும் அவாமி மோர்ச்சாவின் மாஞ்சி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதில் கடந்த இருமுறையும் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்த போது பாஜக 102 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தது.
இதனால், வரவிருக்கும் தேர்தலிலும் அதே எண்ணிக்கையிலான தொகுதிகளில் பாஜக போட்டியிட வேண்டும் எனவும், மீதியுள்ளவை தங்களுக்கு பிரித்து தர வேண்டும் எனவும் அதன் கூட்டணிக் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், இவர்களுக்குள்ளான தொகுதி பங்கீட்டில் இழுபறி வர வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம், பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘243 தொகுதிகள் கொண்ட பிஹாரில் தனிமெஜாரிட்டியில் வெல்லும் வகையில் குறைந்தது 185-ல் போட்டியிட நம் தலைமை விரும்புகிறது.
இதற்காக, மத்திய இணை அமைச்சர்களாக இருக்கும் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் உபேந்தராவின் கட்சிகளுக்கு மேலும் தலா ஒரு அமைச்சர் பதவி கொடுக்கவும் தயாராக உள்ளது.
இதே வகையில் ஜிதன் ராம் மாஞ்சியை மாநிலங்களவை உறுப்பினராக்கி அமைச்சரவையில் இடம் கொடுத்து, அதிக தொகுதிகளில் போட்டியிடவே நாம் விரும்புகிறோம்.’ எனக் கூறுகின்றனர்.
கடந்த 2005 சட்டப்பேரவை தேர்தலில் 102-ல் போட்டியிட்ட பாஜக 91, ஐக்கிய ஜனதா போட்டியிட்ட 141-ல் 115-லும் வெற்றி பெற்றன.
இந்தமுறை பாஜகவிடம் இருந்த பிரிந்த ஐக்கிய ஜனதா 100, அதன் கூட்டணிகளான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 100, காங்கிரஸ் 40 மற்றும் தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதிகள் என கூட்டணி பங்கீடு செய்து கொண்டன.
இதில், பலரும் எதிர்பார்த்தபடி எந்த பிரச்சனையும் இன்றி கடந்த ஆகஸ்ட் 12-ல் தொகுதி பங்கீடு முடித்துக் கொண்டன. தற்போது, பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சிக் காலம் முடிவடையும் நிலையில் அதன் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. எந்த நேரமும் அறிவிக்கப்பட உள்ள இந்த தேர்தல் தீபாவளி மற்றும் சத் பூஜைக்கு முன்னதாக அக்டோபர் 24 முதல் நவம்பர் 12 ஆம் தேதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.