இந்தியா

பொருளாதார குற்றவாளி என்பதால் டொனால்டு ட்ரம்ப் விருந்துக்கு ஜெகனை அழைக்கவில்லை- சந்திரபாபு நாயுடு விமர்சனம்

செய்திப்பிரிவு

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு, தனது சொந்த தொகுதியான குப்பத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 2-ம் நாளான நேற்று தனது கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஜெகன்மோகன் ரெட்டி பொருளாதார குற்றவாளி என்பதால்தான், அவருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்கும் விருந்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. நாம் நம் மாநிலத்தை காப்பாற்றிக்கொள்ளும் தருணம் வந்துள்ளது. தெலுங்கு தேசம் ஆட்சியின்போது, பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஆந்திராவுக்கு வந்தன. ஆனால், இப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அவை வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினைக்காக மக்களோடு இணைந்து போராட நீங்கள் தயாராக வேண்டும். முதல்வர் ஜெகன் என் மீது உள்ள கோபத்தால் எனது தொகுதிக்கான தண்ணீர் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் தெலுங்கு தேசம் கட்சி மீது சேற்றை வாரி இறைக்கும் பணியை ஜெகன் செய்து வருகிறார். பொய் வழக்குகளைக் கண்டு தொண்டர்கள் யாரும் அஞ்ச வேண்டாம்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

SCROLL FOR NEXT