பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் : கோப்புப் படம். 
இந்தியா

பிஹாரில் என்ஆர்சி அமல் இல்லை; சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது

ஏஎன்ஐ

பிஹாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) அமல்படுத்தப் போவதில்லை என ஒருமனதாக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேறியது. அதேசமயம், 2010-ம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட பழைய முறைப்படியே என்பிஆர் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஹாரில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தின் 2-வது அமர்வில் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப் போவதில்லை என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, சட்டப்பேரவையின் முதல் பாதி அமர்வில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்ஆர்சி, சிஏஏ, என்பிஆர் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பேட்டி அளித்த காட்சி.

அதன்பின் மீண்டும் அவை கூடியபோது முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், "சிஏஏ என்பது மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது அந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா அல்லது இல்லையா என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. ஆனால், என்ஆர்சியைப் பொறுத்தவரை இப்போதுள்ள வடிவத்தில் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்படாது. கடந்த 2010-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது போன்றே நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், "மாநிலத்தில் என்பிஆர் பணிகள் மே 15-ம் தேதி முதல் ஜூன் 28-ம் தேதி வரை நடக்கும் என துணை முதல்வர் சுஷில் குமார் மோடி முன்னதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பின்னர் எவ்வாறு பழைய முறையில் பின்பற்றுவீர்கள்" எனக் கேட்டார்.

அப்போது துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி பேசுகையில், "முதல்வர் நிதிஷ் குமார் என்பிஆர் 2010 முறையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். அதில் எந்தவிதமான கேள்விக்கும் இடமில்லை" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே எதிர்க்கட்சிகள் என்ஆர்சியை அமல்படுத்தமாட்டோம் என்று தீர்மானம் கொண்டுவரக் கோரினர். அதற்கு முதல்வர் நிதிஷ்குமார் பதில் அளிக்கையில், ''அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஒப்புக்கொண்டால், மாநிலத்தில் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்படாது என்று தீர்மானம் கொண்டுவருகிறோம்" எனத் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, மாநிலத்தில் என்ஆர்சி நடைமுறைப்படுத்தப்படாது, என்பிஆர் 2010-ம் ஆண்டு பின்பற்றப்பட்ட முறையிலேயே நடைமுறைப்படுத்தப்படும். புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாது என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT