எம்எல்ஏ பதவியை இழந்த குல்தீப் செங்கார் : கோப்புப்படம் 
இந்தியா

உன்னாவ் பலாத்கார குற்றவாளி குல்தீப் செங்கார் எம்எல்ஏ பதவியை இழந்தார்: உ.பி. சட்டப்பேரவை அறிவிப்பு

ஐஏஎன்எஸ்

உன்னாவ் பலாத்கார வழக்கில் ஆயுள் சிறை தண்டனை பெற்ற, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட குல்தீப் செங்கார் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்று உத்தரப் பிரதேச சட்டப்பேரவை அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதியின் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கடந்த 2017-ம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, குல்தீப் சிங் செங்கார் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார்.

இதையடுத்து எம்எல்ஏ செங்கார் கைது செய்யப்பட்டார். அவரைக் கட்சியில் இருந்தும் பாஜக தலைமை நீக்கியது. குல்தீப் சிங் செங்கார் மீது போக்ஸோ சட்டம், பலாத்காரம், ஆள் கடத்தல், மிரட்டல், வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது .

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குல்தீப் செங்காரை குற்றவாளி என்று அறிவித்து வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி எம்எல்ஏ 4 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர் பதவியை இழக்கக்கூடும். அதன்படி ஆயுள் சிறை பெற்ற குல்தீப் செங்கார் இயல்பாகவே பதவியை இழக்க நேரிட்டது.

தற்போது உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருவதால், பேரவைச் செயலாளர் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், ''பாலியல் வழக்கில் ஆயுள் சிறை தண்டனை பெற்ற பங்கார்மாவு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் செங்கார் எம்எல்ஏ, பதவி வகிக்கும் தகுதியை 2019, டிசம்பர் 20-ம் தேதி முதல் இழந்துவிட்டார். அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT