இந்தியா

டெல்லி வன்முறை: போலீஸாரால் செயல்பட முடியவில்லை; உத்தரவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்: அரவிந்த் கேஜ்ரிவால் சாடல்

செய்திப்பிரிவு

வெளியாட்கள் டெல்லி போராட்டப்பகுதிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்கும் விதமாக டெல்லியின் எல்லைப் பகுதியை சீல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ‘போலீஸாரால் எதுவும் செய்ய முடியவில்லை’ என்று சாடியுள்ளார்.

டெல்லி போலீஸ் துறை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது. வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இதுவரை 7 பேர் பலியாக சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “வன்முறையை அடக்க போலீஸாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளுக்காக காத்திருக்கின்றனர். இந்தப் பிரச்சினையை அமித் ஷாவிடம் நான் நிச்சயம் எழுப்புவேன். கண்ணீர்ப்புகை குண்டு வீசுவதா அல்லது லத்தி சார்ஜ் செய்வதா என்பதில் அவர்களுக்கு தெளிவான முடிவு இல்லை, உத்தரவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

இறந்த போலீஸ் தலைமைக் காவலர்கள், காயமடைந்தவர்கள் அனைவரும் நம் மக்கள். இவர்கள் டெல்லியின் மக்கள். இது நல்ல சூழ்நிலையே அல்ல. சிலரது வீடுகளும் கடைகளும் எரிக்கப்படுகின்றன, அவையெல்லாம் வேறு ஒருவரின் சொத்தாகும்.

அனைத்து கட்சியினரையும் அழைத்துப் பேசவிருக்கிறேன், ஏனெனில் சிலர் கூறுகின்றனர், டெல்லிக்கு வெளியே இருந்து உள்ளே வருபவர்கள் இங்கு பிரச்சினைகளை உருவாக்குகின்றனர் என்கின்றனர். டெல்லியின் எல்லைகளை சிறிது காலம் மூடப்பட வேண்டும் என்கிறேன்” என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.

SCROLL FOR NEXT