கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த பிரபல நிழல் உலக தாதா ரவி பூஜாரி மீது நாடு முழுவதும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் பிரபல நிழலுலக தாதாக்கள் சோட்டா ராஜன்,தாவூத் இப்ராஹிம் ஆகியோருக்கு கூட்டாளியாக இருந்துள்ளார். அப்போது இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளிலும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
சர்வதேச போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியான இவர் மீது 13 முறை ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2019 ஜனவரி 19-ம் தேதி மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகலில் இருந்து சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட ரவி பூஜாரியை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த ஓராண்டாக அந்நாட்டு சிறையில் தண்டனை அனுபவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய அரசு, ரவி பூஜாரியை இந்தியாவுக்கு அழைத்துவர முயற்சி மேற்கொண்டது. இதற்குதடை கோரி செனகல் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.அண்மையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ரவிபூஜாரியை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணிகளை கர்நாடக போலீஸார் மேற்கொண்டனர். இதற்கு இருநாட்டு வெளியுறவு அதிகாரிகளும் போலீஸாரும் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து கர்நாடக குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி அமர்குமார் பாண்டே தலைமையிலான தனிப்படை போலீஸார் செனகல் சென்று ரவி பூஜாரியை நேற்று விமானம் மூலம் பெங்களூரு அழைத்து வந்தனர். அப்போது எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் விமான நிலையத்தில் இருந்து ரவி பூஜாரி போலீஸ் வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவரது உடல் நிலையை பரிசோதித்த பின்னர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த குற்றப்பிரிவு அதிகாரிகள், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.