திருமண அழைப்பிதழ் உள்ளே வைத்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெங்களூருவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக 43 திருமண அழைப்பிதழ்கள் தனியார் கூரியர் வாயிலாக விமான நிலைய கார்கோவுக்கு கடந்த சனிக்கிழமை வந்தன. திருமண அழைப்பிதழின் எடை வழக்கத்தை விட கூடுதலாக இருந்ததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த விலை உயர்ந்த திருமண அழைப்பிதழின் அட்டையை இரண்டாகப் பிரித்துப் பார்த்தபோது, பிளாஸ்டிக் பையில்போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுபோல் 43 அழைப்பிதழ்களையும் பிரித்துப் பார்த்ததில் 86 பிளாஸ்டிக் பைகள் சிக்கின.அவற்றில் எஃப்ரின் எனப்படும்அனஸ்தியாவுக்கு பயன்படுத்தப்படும் போதைப்பொருள் இருந்தது. இதையடுத்து 86 பைகளிலும் இருந்த மொத்தம் 5 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து விமான நிலைய போலீஸார் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். திருமண அழைப்பிதழை அச்சடித்த ஆப்செட் நிறுவனம், கூரியர் நிறுவனம், அதில் இடம்பெற்றுள்ள அனுப்புநர் முகவரிஆகியவை குறித்து முதல்கட்டமாக விசாரித்து வருகின்றனர். அனுப்புநர் முகவரி தவறாக இருப்பதால், பெறுநர் முகவரி குறித்து ஆஸ்திரேலிய போலீஸார் மூலமாக விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன் கடந்த 18-ம் தேதிபெங்களூருவில் இருந்து துபாயில்உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு அனுப்பப்படவிருந்த துணியில் நூதனமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ போதைப்பொருளை விமான நிலைய கார்கோ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 கோடி மதிப்பிட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரே வாரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டு இருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.