இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மதச் சுதந்திரம், காஷ்மீர் விவகாரம், சிஏஏ உள்ளிட்ட உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு முதல் முறையாக ட்ரம்ப் வந்துள்ளார். அவருடன் அவரின் மனைவி மெலானியா ட்ரம்ப், ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், ட்ரம்ப்பின் மருமகன் ஆகியோர் வந்துள்ளனர். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடியிடம் மதச் சுதந்திரம், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிபர் ட்ரம்ப் பேசுவார் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் இருந்து புறப்படும் முன் அளித்த பேட்டியில், மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா செல்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிபரின் ட்ரம்ப் பயணம் குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''இந்தியாவில் ஷாகின் பாக் போராட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகிய போராட்டங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகள். இதை இந்திய அரசு கவனித்துக்கொள்ளும்.
ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நாட்டை வழிநடத்தி வருகிறது. அந்த அரசு இந்த விவகாரங்களைப் பார்த்துக்கொள்ளும். வெளிநாட்டினரைச் சேர்ந்தவர்கள் சுதந்திரம் குறித்தோ அல்லது மரியாதை குறித்தோ எந்தவிதமான பாடமும் எடுக்கத் தேவையில்லை. ஆதலால், அமெரிக்க அதிபர் தன்னுடைய சுற்றுலாப் பயணத்தைச் சிறப்பாக முடித்துவிட்டுச் செல்வது நலம். அகமதாபாத், ஆக்ரா, டெல்லியை சுற்றிப் பார்த்துவிட்டுப் புறப்படலாம்.
வர்த்தக சுற்றுலா என்ற அடிப்படையிலேயே அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்துள்ளார். அவரின் பயணம் நிச்சயம் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஊக்கம் அளிக்கும்.
அதுமட்டுமல்லாமல் அதிபர் ட்ரம்ப் இந்தப் பயணத்துக்கு முன்பாக, இந்தியா வளரும் நாடுகள் பட்டியலில் இருந்த நிலையில் அதை அமெரிக்கா நீக்கிவிட்டது. இதனால் இந்தியத் தொழிலதிபர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த அதிபர் ட்ரம்ப் ஏதேனும் குறிப்புகள் அளிப்பாரா?
அதிபர் ட்ரம்ப்பின் இந்த 36 மணிநேர நீண்ட பயணம் நிச்சயம் இந்தியாவின் நிதிச் சிக்கலைத் தீர்க்க உதவாதது. வேலையின்மையைத் தீர்க்கவும் உதவாது. அவர் வந்து சென்ற பின் அவரின் அனைத்துத் தடயங்களும் அழிக்கப்படும்.
அதிபர் ட்ரம்ப்பின் வருகையால் அகமதாபாத்தில் கொண்டாட்டமாக இருக்கிறது. அடுத்து டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் அரசின் கல்விச் சாதனைகளை அதிபர் ட்ரம்ப் பார்க்கப்போகிறார். அப்படியென்றால், பிரதமர் மோடியின் சாதனைகளை எப்போது அதிபர் ட்ரம்ப் பார்வையிடப் போகிறார்?
அகமதாபாத்தில் சாலைகள் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. ஏழ்மையை வெளிக்காட்டும் குடிசைப்பகுதிகள் சுவர் வைத்து மறைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் பயணத்தைக் காட்டிலும் இதுபோன்ற விஷயங்கள்தான் அதிகம் கவர்ந்துள்ளன''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.