இந்தியா

''தேசச் சேவையில் தியாக உணர்வே சிப்பாயின் கனவு'' - புல்வாமாவில் கண்ணிவெடி அகற்றுதலில் உயிரைப் பறிகொடுத்த மேஜர் சித்ரேஷுக்கு முதலாமாண்டு அஞ்சலி

பிடிஐ

''தேச சேவையில் தியாக உணர்வே சிப்பாயின் கனவு'' என்று புல்வாமாவில் கண்ணிவெடி அகற்றுதலில் உயிரைப் பறிகொடுத்த மேஜர் சித்ரேஷ் பிஷ்ட் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ல் காஷ்மீரைச் சேர்ந்த புல்வாமாவாவில் துணை ராணுவப் படை வாகனங்கள் மீது மிகப்பெரிய தாக்குதலை ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கம் நடத்தியது. இதில் மத்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தையொட்டி சர்வதேச எல்லைப் பகுதிகளில் கண்ணி வெடிகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றும் பணி நடைபெற்றது. கண்ணி வெடிகளை அகற்றிக் கொண்டிருந்தபோது ஒரு கண்ணி வெடியைச் செயலிழக்க முயற்சித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் மேஜர் சித்ரேஷ் பிஷ்ட் கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அன்று இதே நாளில் உயிரிழந்தார்.

கடமையின்போது உயிர்த் தியாகம் செய்த மேஜருக்கு இன்று முதலாமாண்டு அஞ்சலியை சிறப்பாக செலுத்தும் வகையில் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், டேராடூனில் உள்ள மேஜர் சித்ரேஷ் பிஷ்ட்டின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோர்களைச் சந்தித்தார்.

மேஜரின் பெற்றோரைச் சந்தித்த பிறகு உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறுகையில், ''புல்வாமாவில் உள்ள ஒரு சிஆர்பிஎஃப் கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, கண்ணி வெடிகள் அகற்றும் பணி நடைபெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் உள்ள நவ்ஷெரா பிளாக்கில் ஒரு கண்ணி வெடியை அகற்ற முற்பட்டுக்கொண்டிருந்தபோது மேஜர் சித்ரேஷ் பிஷ்ட் உயிரிழந்தார்.

அவரது தியாகத்தை நான் போற்றுகிறேன். தேசச் சேவையில் தியாக உணர்வை அடைவது ஒவ்வொரு சிப்பாயின் கனவு ஆகும். ராணுவ வீரர்களே தேசத்தின் பெருமை. தியாகிகளின் உறவினர்களுடன் மாநில அரசு எப்போதும் துணை நிற்கும்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT