பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

மது வகைகள் டோர் டெலிவரி: மத்தியப் பிரதேச அரசு புதிய திட்டம்; இத்தாலி போன்று காங்.மாற்றுகிறது - பாஜக விமர்சனம்

ஏஎன்ஐ

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, ஆன்லைனில் மது வகைகளை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்படும் என்று மதுக்கொள்கையில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக கமல்நாத் இருந்து வருகிறார். 2020-21 ஆம் ஆண்டுக்கான மதுக்கொள்கையில் திருத்தம் செய்து மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி, இந்த ஆண்டு மாநிலத்தில் புதிதாக எந்த மதுக்கடையும் திறக்க அனுமதி தரப்படாது.

அதேசமயம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, உள்நாட்டில் விற்பனைக்கு இருக்கும் மது வகைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்படும். சட்டவிரோதமாக மது வகைகள் விற்பனையைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வெளிநாட்டு மது வகைகள் மீதும் பார்கோடு பொறிக்கப்படும் என்பதால், கள்ளத்தனமாக அதை விற்பனைக்கு அனுப்ப முடியாது.

இதுதவிர 15 புதிய ஒயின் கடைகள் திறக்கப்பட உள்ளன. திராட்சை மூலம் தயாரிக்கப்படும் ஒயின்களை விற்பனை செய்வதற்காக சுற்றுலாத் தளங்களில் மட்டும் 15 புதிய கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். இந்த 15 கடைகளுக்கும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும்

மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் : கோப்புப்படம்

மாநிலத்தில் உள்நாட்டு மது வகைகளை விற்பனை செய்யும் 2,544 மதுக்கடைகள், வெளிநாட்டு மது வகைகள் விற்பனை செய்யும் 1,061 மதுக்கடைகளின் ஆண்டுக் கட்டணம் 25 சதவீதம் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கும்.

ஒவ்வொரு மதுக்கடையைச் சுற்றி 5 கி.மீ சுற்றளவுக்குள் வேறு மதுக்கடைகள் ஏதும் இல்லாவிட்டால், அதன் அருகே துணை மதுக்கடை திறக்கப்படும். இந்தத் திட்டத்தை ஏற்கெனவே இருந்த பாஜக ஆட்சியில் முன்மொழியப்பட்டது என்று கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆன்லைனில் மது விற்பனை அறிமுகம் செய்ததுகுறித்து பாஜக மாநில துணைத்தலைவர் ராமேஷ்வர் சர்மா கூறுகையில், " உங்கள் வீட்டு வாசலில் இனிமேல் மது கிடைக்க கமல்நாத் அரசு உதவும். மத்தியப் பிரதேசத்தை மதுவில் திளைக்கும் மாநிலமாக மாற்றி, எதிர்காலச் சந்ததியினரை இருளில் தள்ளப்போகிறது. இதன் மூலம் அரசின் நோக்கம் தெளிவாகிறது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்

இந்தூர் பாஜக எம்எல்ஏ ரமேஷ் மென்டோலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "ஆன்லைனில் மது விற்க காங்கிரஸ் அரசு முடிவு செய்துவிட்டது. இத்தாலி மக்கள் சிலருக்காக, மத்தியப் பிரதேசத்தை இத்தாலியாக மாற்ற முயல்கிறது" எனத் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT