சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புள்ள வூஹானில் உள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் விமானத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏதும் செய்யப்படவில்லை என அந்நாடு விளக்கம் அளித்துள்ளது.
சீனாவின் கரோனா வைரஸால் அதிகமான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் வுஹான் நகரில் இருந்து 323 இந்தியர்கள், 7 மாலத்தீவு நாட்டவர்களை அழைத்துக் கொண்டு 2-வது ஏர் இந்தியா விமானம் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.
இதுவரை சீனாவில் இருந்து 654 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஹூபி மாநிலத்தில் உள்ள வுஹான் நகரை மையமாக வைத்துப் பரவிய கரோனா வைரஸால் இதுவரை 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 நாடுகளுக்கும் மேலாகப் பரவியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் இரு ஜம்போ விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி முதல் விமானத்தில் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
2-வது ஏர் இந்தியா விமானத்தில் 323 இந்தியர்கள், மாலத்தீவு நாட்டவர் 7 பேரை அழைத்து வரப்பட்டனர். மொத்தமாக 623 பேர் வந்து சேர்ந்துள்ளனர்.
இந்தநிலையில் மீதமுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வர இந்திய விமானப்படையின் மிகப்பெரிய விமானமான சி-17 குளோப்மாஸ்ட்ர் விமானத்தை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. மேலும் சீனாவுக்கு மருத்துவ உதவியளிக்கும் பொருட்டு மருந்து மற்றும் உபகரணங்களுடன் செல்ல தயாராக இருப்பதாக பிப்ரவரி 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த விமானத்திற்கு இதுவரை சீனா தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. சீனா வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் தாமதித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் வூஹானில் மீதமுள்ள இந்தியர்களையும் மீட்டு வர இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேசி வருவதாகவும், இந்திய மீட்பு விமானத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏதும் இல்லை என்றும் சீன வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும் டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘‘சீனாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மருத்து உதவி வழங்குவதில் எந்த சமரசமும் இல்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்’’ எனக் கூறினார்.