ஆர்.ஷபிமுன்னா
உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃபு வாரியத்தின் நிர்வாகக் குழு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், உத்தரபிரதேச அரசு அயோத்தியில் ஒதுக்கிய நிலத்தில் மசூதி கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பளித்தது. அந்த இடத்தில் இந்துக்கள் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அதேநேரம் மசூதி கட்டுவதற்காக வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, ராமர் கோயில் கட்டும் பணிகளை கவனிக்க மத்திய அரசு புதிய அறக்கட்டளையை அமைத்துள்ளது.
மேலும் மசூதி கட்டுவதற்காக அயோத்தியின் சோஹாவல் தாலுகா, ரனோஹி பஞ்சாயத்தின் கீழ் உள்ள தனிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் மசூதிக்காக அரசிடம் இருந்து நிலம் பெறக் கூடாது என ஒரு தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உ.பி. சன்னி மத்திய வக்ஃபு வாரியத்தின் நிர்வாகிகள் கூட்டம் லக்னோ நகரில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அரசு ஒதுக்கிய நிலத்தை பெற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
நிலத்தை ஏற்பது என முடிவு செய்தால், அங்கு மசூதி கட்டுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அந்த நிலத்தில் மசூதிக்கு பதில் பொதுமக்களுக்கான கல்வியகம் மற்றும் மருத்துவமனை கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருந்தது.
இது குறித்தும் உ.பி. சன்னி மத்திய வக்ஃபு வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து உபி சன்னி மத்திய வக்ஃபு வாரிய வட்டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘மொத்தம் உள்ள 8 நிர்வாகிகளில் சையது இம்ரான் கான் மற்றும் அப்துல் ரசாக் ஆகிய இருவரும் நிலத்தை பெற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களின் ஷரீயத் சட்டத்தில் இதற்கு அனுமதியில்லை எனக் காரணம் காட்டுகின்றனர். எனினும், வாரியத்தின் தலைவர் ஜுபேர் அகமது பரூக்கீ, அந்நிலத்தை பெற நிர்வாகக்குழு அனுமதிக்கும் என நம்புகிறார்” என்றனர்.
இதனிடையே, மசூதிக்காக உ.பி. அரசு ஒதுக்கியுள்ள நிலம் ராம்ஜென்ம பூமியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அயோத்தி நகருக்குள் நிலம் ஒதுக்கப்படாவிட்டால் அவ்வழக்கின் முக்கிய மனுதாரர்களான ஹாஜி மஹபூப் மற்றும் இக்பால் அன்சாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகக் கூறி உள்ளனர்.
25 கி.மீ. தொலைவில் நிலம் ஒதுக்கி இருப்பதால், பாபர் மசூதியில் செய்தது போல, புதிய மசூதியில் அயோத்தி நகரவாசிகளால் தொழுகை நடத்த முடியாது எனவும் அவர்கள் காரணம் கூறுகின்றனர்.