இந்தியா

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் மீதான மேட்ச் பிக்ஸிங் வழக்கால் வாஜ்பாய், அத்வானி அதிருப்தி: டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரின் புத்தகத்தில் தகவல்

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச் பிக்ஸிங் வழக்குப் பதிவு செய்ததால் அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி ஆகியோர் காவல்துறை மீது அதிருப்தி கொண்டனர் என்று டெல்லி போலீஸ் கமிஷனராக இருந்த அஜய் ராஜ் சர்மா கூறியுள்ளார்.

டெல்லி போலீஸ் கமிஷனராக 2000-ம் ஆண்டில் இருந்தவர் அஜய் ராஜ் சர்மா. பணியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ‘பைட்டிங் தி புல்லட்-மெமரீஸ் ஆப் எ போலீஸ் ஆபிஸர்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை அஜய் ராஜ் சர்மா எழுதியுள்ளார்.

அந்தப் புத்தகத்தில் அஜய் ராஜ் சர்மா கூறியுள்ளதாவது:

2000-ம் ஆண்டில் இந்தியா, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற்றபோது மேட்ச் பிக்ஸிங் ஊழல் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஹான்சி குரோனியே உள்ளிட்டோர் மீது டெல்லி போலீஸாரால் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்திய அணியின் அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன், அணி வீரர் அஜய் ஜடேஜா உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

டெல்லி போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நடந்தபோது பிரதமர் வெளிநாடு சென்றிருந்தார். அதைப் போல் அத்வானியும் டெல்லியில் இல்லை. அவர்கள் டெல்லி திரும்பியபோது டெல்லி போலீஸாரின் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான தென் ஆப்பிரிக்கத் தூதரும் பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சக அலுவலகத்தில் தங்கள் நாட்டின் சார்பாக அதிருப்தியைத் தெரிவித்தார். இதனால் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் டெல்லி போலீஸாரின் நடவடிக்கை மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

டெல்லி துணை நிலை ஆளுநர், நான் உள்பட 11 பேருக்கு உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. நேரில் சென்றபோது நாங்கள் எடுத்த நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சக அதிகாரிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

நான் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் இருந்தபோது ஏன் தென் ஆப்பிரிக்க அணியினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்தீர்கள் என்று அத்வானி கேள்வி எழுப்பினார். அப்போது அங்குள்ள தொலைக்காட்சி செய்தியைப் பார்க்குமாறு நான் அமைச்சர் அத்வானியிடம் கூறினேன்.

அப்போது தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஹான்சி குரோனியே முழங்காலிட்டிருந்த காட்சிகள் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தன. அதைப் பார்த்த பிறகு உள்துறை அமைச்சகத்தில் எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT