கேரளாவில் ஒரு பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது மதத்தின் பெயரை குறிப்பிட மறுத்ததால், குழந்தைை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க மறுத்துவிட்டதாகப் பள்ளி மீது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து கேரள பள்ளிக்கல்வித்துறையும் அறிக்கை கேட்டுள்ளது.
சமீபத்தில் கேரள கல்வித்துறை அமைச்சர் ரவிந்திராத் சட்டப்பேரவையில் பேசுகையில் " கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 147 குழந்தைகள் தங்களின் சாதி, மதம் குறிப்பிடாமல் அரசுப்பள்ளியிலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சேர்ந்துள்ளார்கள்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தம்பதி நஸீம், தான்யா. இதில் நஸீம் வளைகுடா நாட்டிலிருந்து திரும்பிவந்து, தனியாக கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது மகனை அரசு உதவி பெரும் புனித மேரி பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்க்கச் சென்றுள்ளார்.
அப்போது சேர்க்கை விண்ணப்பத்தில் மதத்தின் பெயரைக் குறிப்பிடும் இடத்தில் அதை நிரப்பாமல் நிர்வாகத்திடம் நஸீம் வழங்கினார். ஆனால், இதைப் பார்த்த பள்ளி நிர்வாகமோ மதம் என்று குறிப்பிட்ட இடத்தில் நிரப்பாமல் இருக்க முடியாது உங்கள் மதத்தைக் குறிப்பிடுங்கள். மதத்தைக் குறிப்பிட்டால்தான் நாங்கள் உங்கள் மகனைச் சேர்க்க முடியும் என்று நஸீமிடம் தெரிவித்தது.
ஆனால், தனக்கு மதத்தைக் குறிப்பிட விருப்பமில்லை என்று நஸீலம் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி நிர்வாகம் தரப்பில், மாநில அரசுப் பள்ளி சேர்க்கைக்கு வழங்கிய சம்பூர்ணா போர்டலில் மதம் என்ற இடத்தை குறிப்பிடாமல் விண்ணப்பத்தை அனுப்ப முடியாது அதுபோன்று தொழில்நுட்பம் இருக்கிறது என்று விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவரின் தந்தை நஸீம் நிருபர்களிடம் கூறுகையில், " விண்ணப்பப் படிவத்தில் மதத்தின் பெயரைக் குறிப்பிட விருப்பமில்லை என்று நாங்கள் தெரிவித்தோம். ஆனால், மதத்தின் பெயரைக் குறிப்பிடாமல் எங்கள் மகனைச் சேர்க்க முடியாது எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்தார்கள்.
எந்த மதத்தையும் குறிப்பிடாமல் இருந்தால் பள்ளியின் சேர்க்கை மென்பொருள் ஏற்காது என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தினார்கள்.
இதனால் நாங்கள், மாநில கல்வித்துறை அதிகாரிகளை அணுகி நாங்கள் விளக்கம் கேட்டோம். அதன்பின் மீண்டும் பள்ளி நிர்வாகத்தை அணுகியபோது, எதிர்காலத்தில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்குப் பெற்றோர்தான் பொறுப்பு என்று கடிதம் எழுதிக் கேட்டார்கள்" எனத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாநில கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், " மாநிலம் முழுவதும் மாணவர் சேர்க்கையில் எந்தவிதமான குழப்பமும் இல்லை" எனத் தெரிவித்தார்கள்.
அதன்பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரவிந்திர நாத்திடம் இந்த சம்பவம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, " கல்வித்துறை துணை இயக்குநர், மாநில கல்வித்ததுறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அவர்கள் அறிக்கை அளித்தபின் பேசுகிறேன்" எனத் தெரிவித்தார்
இதற்கிடையே, பள்ளி நிர்வாகம் தரப்பில் நஸீம் அவரின் மனைவியைச் சமாதானத்துக்கு அழைத்து மாணவரைச் சேர்த்துக்கொள்வதாகக் கூறியுள்ளனர். ஆனால், நஸீம் தரப்பில் சமாதானத்துக்கு மறுத்து அந்த பள்ளியில் சேர்க்க முடியாது. பள்ளியின் அணுகுமுறை தவறாக இருப்பதால், வேறு பள்ளியில் சேர்க்கப்போகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், " மதத்தின் அடிப்படையில் எந்த குழந்தைக்கும் சேர்க்கையை மறுக்கவில்லை. எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று பெற்றோரிடம் கடிதம் கேட்டோம். மதத்தைக் குறிப்பிடச் சொன்னபோது விருப்பமில்லை என்றதும் அவர்களின் உரிமை என்று விட்டுவிட்டோம். அரசின் பெரும்பாலான சலுகைகள் மதத்தின் அடிப்படையில் வருவதால் நாங்கள் குறிப்பிடச் சொன்னோம். எதிர்காலத்தில் மாணவருக்கு அரசின் பலன்கள் கிடைக்காமல் போனால் அதற்குப் பெற்றோர் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினோம்" எனத் தெரிவித்தனர்.