இந்தியா

சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் பயிற்சி பெண் கிளார்க்குகளை நிர்வாணப்படுத்தி சோதனை: விசாரணைக்கு உத்தரவு

பிடிஐ

குஜராத் மாநிலம், சூரத் முனிசிபல் கார்ப்பரேஷமன் பயிற்சி பெண் கிளார்க்குகளை சோதனை செய்வதற்காக நிர்வாணப்படுத்தியது சர்ச்சைக்குள்ளானதையடுத்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சூரத் நகராட்சி ஆணையர் பன்ச்சாநிதிபானி இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். மருத்துவமனை ஒன்றில் மகப்பேறு பிரிவில் பயிற்சி பெண் கிளார்க்குகள் 10 பேரை சோதனை செய்வதற்காக நிர்வாணப்படுத்திய சம்பவம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

குஜராத் பூஜ் நகரில் சமீபத்தில் மாதவிடாய் சோதனைக்காக மாணவிகளை விடுதியாளர் நிர்வாணப்படுத்திய சர்ச்சை ஓய்வதற்குள் குஜராத்தில் மீண்டும் இன்னொரு சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் அளித்த புகாரில் திருமணமாகாத பெண்களையும் மற்றவர்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி கருத்தரிப்புச் சோதனை நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் பிப்ரவரி 20ம் தேதி நடந்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் நகர ஆணையர் பானி 3 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை நியமித்து இந்த கமிட்டி 15 நாட்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் டாக்டர் கல்பனா தேசாய், உதவி முனிசிபல் கமிஷனர் காயத்ரி ஜாரிவாலா, செயல் பொறியாளர் துருப்தி கலாத்தியா ஆகியோர் இந்தக் கமிட்டியின் உறுப்பினர்கள் ஆவர்.

பயிற்சிக் காலம் முடிந்தவுடன் பயிற்சி கிளார்க்குகள் உடற்தகுதி சோதனை மேற்கொள்வது அவசியம். இந்தக் கட்டாய சோதனை குறித்து தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்ற புகார்தாரர்கள் பெண்களை கண்ணியக் குறைவாக நடத்தியதைக் கண்டித்துள்ளனர்.

ஒவ்வொருவராக தனித்தனியாக அறைக்கு அழைக்கப்பட்டு சோதிக்க வேண்டியது போக பெண் மருத்துவர்கள் 10 பயிற்சி பெண் கிளார்க்குகளையும் ஒருசேர நிர்வாணப்படுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. மற்றவர்கள் முன்னிலையில் இவர்களை இப்படி நடத்தியது இழிவாகும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

“இத்தகைய முறை சட்ட விரோதமானது, மனிதா மாண்புக்கு கேடு விளைவிப்பதோடு பெண்களைக் கண்ணியக் குறைவாக நடத்துவதாகும்” என்று புகார் எழுப்பப்பட்டுள்ளது.

யூனியன் செயலர் கூறும்போது, பெண் மருத்துவர்கள் அவர்களை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கி சோதனையின் போது அவர்களிடம் அபத்தமான கேள்விகளையும் கேட்டனர். மருத்துவர்கள் கருத்தரிப்பு குறித்து அந்தரங்கமான கேள்விகளைக் கேட்கக் கூடாது. திருமணமாகாதவர்களுக்கும் கருத்தரிப்புச் சோதனை நடத்தியுள்ளனர்” என்றார்.

விஷயம் உண்மை என்றால் இத்தகைய சோதனை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கைப் பாயும் என்று சூரத் மேயர் ஜக்தீஷ் படேல் உறுதியளித்தார்.

SCROLL FOR NEXT